கல்லூரி நட்பின் பிரிவு

கல்லூரிக்குள் நுழைந்த முதல் நாளில்
பயமும் தயக்கமும், நிறைந்த மனது
கடைசி நாள் பிரிவில்
கண்ணீரும் ஏக்கமுமாய் மாறும் என
நாம் நினைத்திருக்க மாட்டோம்.

அன்று யாரென்றே தெரியாமல்,
பேசவே தயங்கிக் கொண்டிருந்த நம்மை
அருக‌ருகே அமர வைத்த காலம்,
இன்று இதோ வ‌ந்துவிட்டது, மனதால் நெருங்கி
பிரிய மனம் இல்லாதவர்களை
ஆளுக்கு ஒரு மூலையாய் துரத்தி விட.

அன்று தொடங்கி இன்று வரை தொடர்ந்த‌
நமது கல்லூரி பயணம், நம் மனங்களில்
விட்டுச் சென்றுள்ளது
பல பசுமையான நினைவுகளையும்
சில மறக்க முடியாத ரணங்களையும்.

சில குறும்பான‌ காரணங்களாலும்,
காரணமே இல்லாமலும்
நாம் வைத்த செல்ல பெயர்களால்
மறந்தே போனோம் பல‌ நிஜ பெயர்களை.
இனி,யாருமில்லை அப்பெயர்களைச்
சொல்லி கொஞ்சலாக‌ நம்மை அழைக்க‌.

இனி இருக்கப் போவதில்லை,
கடைசி இருக்கை அரட்டைகளும்,
தோழியின் தந்தை மரணத்திற்கு
நாம் எல்லோரும் அழுததும்,
கல்லூரிப் பேருந்து பயணங்களும்,
ஆண் பெண் பாகுபாடு அற்ற நட்பும்,
'கேக்' பூசிய பிற‌ந்த நாட்களும்,
இன்னும் பட்டியலுக்குள் அடங்காத பலவும்….

இது நிரந்திர பிரிவில்லையே!’ ,
எப்படியும் எல்லோரும் தொடர்பில்
தானே இருக்கப் போகிறோம்,
என ஒருவரை ஒருவர் தேற்றினாலும்
தவிர்க்க முடியவில்லை
விழிகளின் ஓரத்தில் எட்டிப் பார்க்கும் கண்ணீர்த் துளிகளை...