ஆப்பிள் பற்றிய தகவல்கள்.


ஆப்பிள் மரம் சிறிய இலையுதிர்மரமாகும். சுமார் 5 - 12 மீ உயரம் வரை வளரக்கூடியதுடன், பரந்த கிளைப்பகுதிகளும் கொண்டது. இதன் நீள்கோள வடிவ இலைகள் காம்பில் மாற்றடுக்காக அமைந்துள்ளன. இதன் வெள்ளை நிறப்பூக்கள் ஐந்து இதழ்களுடையவை. ஆப்பிள் பழம் இலையுதிர காலத்தின் போது முதிர்ச்சி அடைகின்றது.

கசகஸ்தான் காட்டின ஆப்பிள் (Malus sieversii) தற்போது விளைவிக்கப்படும் ஆப்பிள் Malus domestica என்ற சிற்றினத்தைச் சேர்ந்தது. இதன் முன்னோடி இனமான Malus sieversii இன்றும் மத்திய ஆசியாவில் கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா (சிஞ்சியாங் பகுதி) ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
இவ்வினம் பலவிதமான அழிக்கும்பூச்சிகளையும் நோய்களையும் தாங்க வல்லது. இதனால் இன்றும் இவ்வினம் ஆப்பிள் ஆராய்ச்சியில் பயன்படுகிறது. மேலும் Malus baccata மற்றும் Malus sylvestris ஆகிய ஆப்பிள் சிற்றினங்களும் கலப்புவிருத்தி செய்து புதிய ஆப்பிள் இரகங்களை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன.

அனேகமாக, ஆரஞ்சு வகை மரங்களுக்கு அடுத்ததாக ஆப்பிள் தான் பல்லாயிரம் ஆன்டுகளாக பயிர் செய்யப்பட்டு வரும் மரமாக இருக்கும். ஆசியா, ஐரோப்பா, அர்ஜென்டினா போன்ற இடங்களில் வசித்த மக்களின் உணவில் ஆப்பிள் ஒரு முக்கியமான பழமாக இருந்துள்ளது. அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் வருகைக்குபின் ஆப்பிள் பிரபலமடைந்தது.

ஆப்பிள் என்ற சொல் பழைய ஆங்கில சொல்லான aeppel (பொருள்: உருண்டை) என்ற சொல்லிலிருந்து வந்தது.

ஆப்பிளின் இரகங்கள்

பயிரிடப்படும் ஆப்பிள்களில் சுமார் 7500 இரகங்கள் உள்ளன. தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு பலவித இரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஆப்பிள் மரங்கள் பூக்க குளிர் அவசியம் என்பதால் பூமத்தியரேகைப் பகுதிகளில் இவை பூக்கா. அதிகமாக விரும்பப்படும் ஆப்பிள்கள் மிருதுவாகவும் மொறுமொறுவென்றும் இருக்கும். ஆப்பிள் கலப்பின விருத்தியில் பின்வரும் குணங்கள் மேம்படுத்தப்படுகின்றன: நிறமுள்ள வெளிப்புறம், கடினத்தோல் இல்லாமை, அதிக நாள் கெடாதிருத்தல், அதிக விளைச்சல், நோய் எதிர்ப்பு, நல்ல ஆப்பிள் வடிவம், நீளமான காம்பு (பழத்தின் மேற்புறம் பூச்சி மருந்து தெளிக்க வசதியாக) மற்றும் விரும்பப்படும் சுவைமணம்.

முந்தைய இரகங்கள் பெரும்பாலும் வித்தியாசமான வடிவமும், கடினத்தோலும், பல்வேறு நிறங்களும் கொண்டிருந்தன. இவற்றில் பல, நல்ல சுவைமணம் கொண்டிருப்பினும் குறைந்த விளைச்சல், நோய் எதிர்ப்பின்மை போன்ற குணங்கள் இல்லாமல் இருக்கும். இருப்பினும், இவற்றுள் சில இன்றும் விவசாயிகள் மிகச்சிலரால் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. பற்பல வேறுபட்ட சுவைமணம் கொண்ட ஆப்பிள்கள் இன்றும் பல இடங்களில் உள்ளன.

பெரும்பாலான ஆப்பிள்கள் பழமாக சாப்பிட உகந்தவை; சில சமைத்துச் சாப்பிடவும், சில பானம் தயாரிக்கவும் உகந்தவை. சில வகை ஆப்பிள்கள் பெரும்பாலும் அதிக உவர்ப்புத்தன்மை உள்ளவை; ஆனால், இவை குளிர் பானத்திற்கு நல்ல சுவைமணம் தருகின்றன.