பச்சோந்திகள் நிறம் மாறுவது எப்படி?..

சமூகத்தில் உலவும் மனித பச்சோந்திகளை புரிந்து கொள்வது சிரமம். அதே போல காடுகளில் இருக்கும் அசல் பச்சோந்திகள் எப்படி நிறத்தை நினைத்ததும் மாற்றிக்கொள்கின்றன என்பதும் சமீபம் வரை விஞ்ஞானிகளுக்கே புதிராகவே இருந்தது. ஆனால், சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த மர்மத்திற்கான பாதி காரணத்தை கண்டுபிடித்திருப்பதாக நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழ் தெரிவிக்கிறது.

பொதுவாக குளிர் ரத்த பிராணி வகையை சேர்ந்த பச்சோந்திகள், உடலில் உள்ள வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்க நிறம் மாற்று தந்திரத்தை கடைப்பிடிக்கின்றன. அடுத்து, பெண் பச்சோந்தியை கவருவதற்கும், எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள பக்கத்தில் இருக்கும் மரம், செடி, கொடிகளின் நிறத்தை போலவே தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்கின்றன.
இது எப்படி என்பதை ஆராய்ந்த ஜெனீவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், முதல் முறையாக பச்சோந்திகளுக்கு தோலில் இரட்டை அடுக்கு கொண்ட ஒளிமப் படிகங்களை (போட்டானிக் கிரிஸ்டல்) கொண்ட செல்கள் இருப்பதை கண்டுபிடித்திருக்கின்றனர். அதிலும் ஆண் பச்சோந்திகளுக்குத்தான் மேல்பக்க அடுக்கில் உள்ள ஒளிம படிக செல்கள் மிகவும் திறன் வாய்ந்தவையாக இருக்கின்றன. பச்சோந்திகள் பதற்றமில்லாமல் இருக்கும்போது, இந்த செல்கள் நீல ஒளியை பிரதிபலிக்கின்றன.