மனிதர்களிடம் அதிகம் உயிரிழப்பை ஏற்படுத்தும் முதல் 10 நோய்களின் பட்டியல்

இன்றைக்கு அதிக அளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவது எபோலோவோ, எய்ட்ஸோ அல்லது வேறு எந்த தொற்றுநோய்களோ அல்ல. கொஞ்சம் உடலில் அக்கறை செலுத்தியிருந்தால் தவிர்த்திருக்கக் கூடிய பக்கவாதம், மாரடைப்பு போன்ற நோய்கள்தான் என்கிறார் டாக்டர் தமிழ்மணி.

அதிக எண்ணிக்கையி்ல் மனிதர்களைக் கொல்லும் நோய்களின் பட்டியலில் இவைகளுக்கு நிரந்தரமான இடங்கள் உண்டு எனும் பகீர் தகவலைச் சொல்லும் இவர், 2012 ல் அதிக எண்ணிக்கையில் மக்களை பலிவாங்கிய 10 நோய்கள் என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட பட்டியலை தந்து எல்லோரையும் எச்சரிக்கிறார்

கொஞ்சம் கவனமா இருந்தால் அடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையைக் கணிசமாக குறைத்து விடலாம் என்றும் நம்பிக்கை தந்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். நோய்களின் பட்டியல் கீழே…..

நுளம்புகள் மூலம் பரவும் வியாதிகள்
மலேரியா… இந்த பெயரைக் கேட்டவுடன், இந்த நோயைத்தான் குணப்படுத்த முடியுமே பின்பு ஏன் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளது? என்ற கேள்வி எழலாம். ஆனால், ஆண்டுதோறும் 3 முதல் 5 கோடி பேர் மலேரியா காய்ச்சலுக்கு ஆளாகின்றனர். இவர்களில் 10 லட்சம் பேர் சரியான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கின்றனர். மலேரியா என்பது ஒட்டுண்ணியால் ஏற்படக்கூடிய காய்ச்சல். இந்த ஒட்டுண்ணி நுளம்புகள் மூலம் பரவுகிறது. வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் வைத்திருந்து, வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருந்தாலே மலேரியாவில் இருந்து தப்பலாம்.


மாரடைப்பு -(ஐசோமிக் இதய நோய்கள்)

உடல் முழுவதுக்கும் தேவையான ரத்தத்தை இதயம் பம்ப் செய்து அனுப்பு கிறது. அந்த இதயத் திசு இயங்கத் தேவையான ரத்தம் செல்லாதபோது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயச் செயல் இழப்பு காரணமாக, இதயம் செயல்பட முடியாமல் போகிறது. இதனாலும் உடல் முழுவதும் ரத்தம் அனுப்பும் பணி பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு ஏற்படுகிறது. இதய ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதால் மாரடைப்பு ஏற்படுகிறது.

இந்த பாதிப்புகள் ஒரே நாளில் ஏற்பட்டுவிடுவது இல்லை. இதற்கு மோசமான உணவு பழக்கம், உடல் உழைப்புக் குறைவு, சிகரெட், மது பழக்கம் போன்றவையே காரணம்.

உலக அளவில் 2012-ல் 1.75 கோடி பேர் இதய நோயால் உயிரிழந்துள்ளனர். இதில் தவிர்க்கக்கூடிய இதய நோய்களான மாரடைப்பு, இதய செயல் இழப்பு உள்ளிட்ட காரணங்களால், 74 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்வதன் மூலம் இதய நோய்க்கான வாய்ப்பைத் தடுக்க முடியும். 30 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது, சரிவிகித உணவை எடுத்துக்கொள்வது, தினசரி உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்தைத் தவிர்ப்பது, சிகரெட், மது பழக்கத்தை கைவிடுவது போன்றவை இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.
நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோயால் 16 லட்சம் பேர் ஒரு ஆண்டில் மட்டும் உயிரிழந்துள்ளனர், இந்த புற்றுநோய்க்கு முக்கியக் காரணம் சிகரெட் புகைப்பது. சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களும் புகையை சுவாசிப்பதால் அவர்களுக்கும் புற்றுநோய் ஏற்படுவதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டாம் நிலை சிகரெட் புகைப் பாதிப்பால் பெண்களும், குழந்தைகளும்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

நெஞ்சு வலி, தொடர்ந்து இருமல், இருமலுடன் ரத்தம் வெளியேறுதல், எடை குறைதல், சுவாசித்தலில் பிரச்னை போன்றவை இதன் அறிகுறிகள். இந்த நோய் முற்றிய பிறகு எலும்புகளில் வலி, திடீரென குரலில் மாற்றம், தோள் பட்டையில் வலி, நகங்களில் பிரச்னை போன்றவை ஏற்படும். தினமும் பழங்கள், கீரைகள் என ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, பீடி, சிகரெட் பழக்கத்தைத் தவிர்த்தாலே இந்த புற்றுநோயில் இருந்து நாம் தப்பிக்க முடியும்.
பக்கவாதம் – இதய ரத்தக் குழாய் நோய்கள்
இதயத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. மூளைக்கு ரத்தம் செல்லவில்லை என்றால், மூளை திசுக்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படுகிறது. புகைப் பிடித்தல், மது அருந்துதல், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு, சர்க்கரை நோய் ஆகிய காரணத்தால் பக்கவாதம் ஏற்படுகிறது.

இதய நோய்களுக்கு அடுத்தபடியாக 67 லட்சம் பேர் 2012 ல் பக்கவாத பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுதல், உடற்பயிற்சி, புகை, மது பழக்கத்தை கைவிடுதல் போன்ற எளிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் செய்தாலே பக்கவாதம் நம் பக்கம் வராது.

நாட்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய்

நாம் உயிர்வாழ தேவையான ஆக்சிஜனை ரத்தத்தில் கலந்து, ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடைப் பிரித்து வெளியேற்றும் பணியை நுரையீரல் செய்கிறது. சி.ஓ.பி.டி எனும் நாட்பட்ட சுவாசக் குழாய் அடைப்பு நோய் ஏற்படும்போது நுரையீரலுக்குச் செல்லும் காற்றின் அளவு குறைந்து விடுகிறது.

இதனால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போய்விடுகிறது. நோய் முற்றிய நிலையில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த நோய் ஏற்படுவதற்குப் புகை பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாசும் காரணமாக இருக்கிறது.

நுரையீரல் நோய்த் தொற்றுகள்

மூச்சுக் குழாயில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றால் 31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித் தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. நிமோனியா மற்றும் இன்ஃபுளுயென்சாவைத் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன. இதய நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள் இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்.

இந்த நோய்த் தொற்று ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது சிகரெட் பழக்கம்தான். விறகு அடுப்புப் புகையை அடிக்கடி சுவாசிக்கும் குழந்தைகளுக்கும் இந்த நோய் ஏற்படுகிறது. வசிக்கும் இடத்தில் அதிகப் புகையற்ற சூழலை ஏற்படுத்தினாலே இந்த நோய்த் தொற்றிலிருந்து விடுபடலாம்.


ஹெச்.ஐ.வி எய்ட்ஸ்

2000-ம் ஆண்டில் 17 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தனர். 2012-ல் இது 15 லட்சமாகக் குறைந்துள்ளது. 1980-ல் முதன் முதலில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டு, அடுத்த சில ஆண்டுகளுக்குள் உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியது. தற்போது விழிப்பு உணர்வு காரணமாக எய்ட்ஸ் நோயாளிகளின் மரண எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளது. ரத்தம் மற்றும் உடல் உறவு மூலம் இந்நோய் பரவுகிறது. மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தியை தாக்கி, எந்த ஒரு சாதாரண நோயும் எளிதில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாற்றி விடுகிறது. இதனால் சாதாரண சளி கூட உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு மாறிவிடுகிறது.

வயிற்றுப்போக்கு

உயிர்க்கொல்லி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த காலரா, தொடர் சுகாதார முயற்சிகளால் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனினும், ஆண்டுக்கு சராசரியாக 15 லட்சம் பேர் வயிற்றுப் போக்கால் உயிரிழக்கின்றனர். பாக்டீரியா, வைரஸ் கிருமி தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, உடலில் உள்ள நீர் வெளியேறும். நீர்ச்சத்துடன் அத்தியாவசிய தாது உப்புக்களும் வெளியேறி உயிரிழப்புக்கு காரணமாகி விடுகிறது.

வயிற்றுப்போக்கால் பெரும்பாலும் குழந்தைகள் தான் பாதிக்கப்படுகின்றனர். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருத்தல், பாதுகாப்பான நீர், உணவை எடுத்துக்கொள்ளுதல் போன்றவற்றால் வயிற்றுப்போக்குக்கான வாய்ப்பைக் குறைக்கலாம். நீராகாரம், பழச்சாறுகள், உப்பு – சர்க்கரை கரைசல் கொடுத்துக்கொண்டே இருப்பதன் மூலம் நீர் இழப்பைத் தடுக்கலாம். பச்சிளம் குழந்தைகளுக்குத தொடர்ந்து தாய்ப்பால் புகட்ட வேண்டும்.

சர்க்கரை நோய்

2012ல் மட்டும் 15 லட்சம் பேர் சர்க்கரை நோயால் உயிரிழந்துள்ளனர். கணையத்தில் போதுமான அளவு இன்சுலின் சுரக்காத நிலை அல்லது உடல் பயன்படுத்தும் அளவுக்கு இன்சுலின் தரம் இல்லாததாக இருப்பதால் ஏற்படும் பிரச்னை சர்க்கரை நோய். சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மன அழுத்தம் தவிர்த்தல், சிகரெட், மது பழக்கத்தைத் தவிர்த்தல், சரியான தூக்கம், தொடர் மருத்துவ பரிசோதனைகள் மூலம் சர்க்கரை நோயைத் தவிர்க்க முடியும்.

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் மாரடைப்பு காரணமாக 11 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உயர் ரத்த அழுத்தத்தால் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட பல உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயல் இழக்கின்றன.
விபத்தும் உயிரிழப்பும்

இதுதவிர ஆண்டுதோறும் 13 லட்சம் பேர் விபத்தால் உயிரிழக்கின்றனர். இதுவும் தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகளில் ஒன்றாக உள்ளது. மேலும், காச நோய், பிரசவகால நோய்கள், மற்றும் புற்றுநோய்களும் அதிக அளவில் உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கின்றன.