படுத்ததும் தூங்க வேண்டுமா..?

ஆழ்ந்த தூக்கம்தான் ஒரு மனிதனை விழிப்பிற்குப் பின் சுறுசுறுப்பாக்கும். அந்த தூக்கத்திற்காக இன்று தடுமாறுபவர்கள் ஏராளம். படுத்ததும் தூங்கிப்போனால் அது அவருக்கு வரம். தூக்கம் வராமல் கண்ணை பிராண்டினால் அதுவே சாபம்!சிலர் படுத்த நீண்ட நேரத்திற்குப் பின்னரே உறங்குவார்கள். இன்னும் சிலர் எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கமின்றி தவிப்பார்கள்.

தூக்கம் வரும்போது, நேரம் விடியலை நெருங்கியிருக்கும். சிலர் தூக்கம் வருவதற்காக 100ல் இருந்து பின்னோக்கி எண்ணுவார்கள் . அவ்வாறு எண்ணும்போது அவர்களது முழுக் கவனமும் எண்களில் கரைந்துவிட சிறிது நேரத்தில் தங்களை மறந்து தூங்கிப் போவார்கள். இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அங்குள்ளவர்களுக்கு தூக்கம் வருவதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆவது தெரிய வந்தது.


ஆழ்ந்த தூக்கத்திற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்கள். மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம். அவர்களில் சிலர் இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பதும் ஆய்வில் தெரிய வந்தது. அதாவது, கீச்சிடும் பறவைகளின் ஒலிகள், மெல்லிய காற்றின் இரைச்சல், நீரோடையின் சலசலப்பு போன்றவை அவர்களது தூக்கத்தை எளிதில் வரவழைக்க பயன்படுகின்றனவாம். சிலர் மிகப் பழமையான முறையான புத்தகம் படிப்பதையும் தூக்கம் வருவதற்காக பயன்படுத்துகிறார்களாம். இன்னும் சிலர் துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிபோகிறார்களாம். இவை தவிர, கடிகாரத்தின் டிக் டிக் ஓசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம், வேக்குவம் க்ளீனர் மற்றும் ஹேர் ட்ரையரின் சப்தமும் இங்கிலாந்துகாரர்களின் தூக்கத்தை வரவழைக்கும் விஷயங்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பதும் ஆய்வில் தெரிய வந்தது. ஆய்வின் நிறைவாக, அதில் கலந்து கொண்டவர்கள் கூறும்போது, `எங்களது தூக்கம் கெட்டுப் போவதற்கு முக்கிய காரணமே, அருகில் குறட்டைப் போட்டுக்கொண்டு தூங்குபவர்கள்தான்’ என்று ஆத்திரமாக வாய் திறந்தார்கள். நீங்களும் தூங்கும்போது குறட்டை இடுபவரா? அப்படியென்றால், உங்கள் அருகில் தூங்குபவர் (அது துணையாக இருந்தாலும்) நிச்சயம் டென்ஷனாகத்தான் இருப்பார். உஷார்! இதற்கிடையில் நம் உடலில் ‘மெலட்டோனின்’ (melatonin)என்கிற ஹார்மோன்சுரக்கிறது. இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது நமக்கு தூக்கம்வரும். குறைவாக சுரக்கும்போது தூக்கம் வராது. இந்த ஹார்மோனோன் நம்மைச் சுற்றி அதிகமான வெளிச்சம் இருக்கும்போது குறைவாகவும், குறைவான வெளிச்சம் இருக்கும்போது அதிகமாகவும் சுரக்கும். பொதுவாகவே இரவு வெகுநேரம் வரையிலும் கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்து வேலை செய்கிறவர்களுக்கு அடுத்த இரண்டு மணிநேரம் வரையிலும்கூட, கண் முன்னே வெளிச்சம் இருப்பது போன்ற உணர்விருக்கும். இதனால் தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள். இதேபோன்ற பிரச்னை விடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகளுக்குக்கூட ஏற்படும். இதனால்தான் டி.வியை தூரமாக உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறோம்.

தூக்கத்தை வரவழைக்க சில டிப்ஸ்:


  • காபி, டீ, சாக்லெட், குளிர்பானங்கள் போன்ற வற்றை சுத்தமாகத் தவிர்த்து விடுங்கள். இவற்றிலுள்ள வேதிப்பொருட்கள், மெலட்டோனின் ஹார்மோனை கட்டுப்படுத்துகின்றன.
  • எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும். குறைந்த வெளிச்சத்தில் தூங்குங்கள். தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்துவிடுங்கள்.
  • தூங்கும் முன் செல்போனை ஆஃப் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இல்லை யெனில் யாராவது போன் செய்வார்களோ என்று உங்கள் ஆழ்மனம் நினைத்துக்கொண்டே இருக்கும். படுப்பதற்கு இரண்டரை மணிநேரம் முன் இரவு உணவை முடித்துவிடுங்கள் (தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு இது பொருந்தாது). இரவில் அரைவயிறு சாப்பிடுங்கள். காலையில் அதிகமாக சாப்பிடலாம்.சிலருக்கு பால் குடித்துவிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். 
  • உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது தூக்கத்துக்கு அருமருந்து. ஆனால், படுக்கச் செல்லும் 4 மணி நேரத்துக்கு முன்பே உடற்பயிற்சியை முடித்துக்கொள்ள வேண்டும்.இதையெல்லாம் பின்பற்றினாலே தூக்கம் உங்கள் கண்களை இதமாகத் தழுவிச் செல்லும்.’