100 வருடம் வாழ 7 கட்டளைகள்.

இரத்த அழுத்தம் உள்பட 7 அம்சங்களை கட்டுப்பாட்டில் வைத்தால் 100 வயது வரை முழு ஆரோக்கியத்துடன் வாழ முடியும் என்கிறார் கனடா டாக்டர்.  இரத்த ஓட்டம் மற்றும் இதய நோய் பாதிப்புகள் தொடர்பான மாநாடு கனடாவில் நடந்தது. உலகின் பல நாடுகளை சேர்ந்த டாக்டர்கள், சிறப்பு நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் கனடாவை சேர்ந்த இதய சிகிச்சை நிபுணர் கிளைட் யான்சி பங்கேற்றார். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான 7 அம்சங்களை பட்டியலிட்டு அவர் உரையாற்றினார்.

அவர் தெரிவித்ததாவது:ரத்த ஓட்டத்தில் ஏற்படும் திடீர் பாதிப்புகள், முடக்குவாதம், மாரடைப்பு ஆகியவற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 25% பேர் இதய நோய் காரணமாகவே இறக்கின்றனர்.



இங்கிலாந்தில் மட்டும் 27 லட்சம் பேர் ஏதோவொரு வகையில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆண்களில் ஒருவரும் 7 பெண்களில் ஒருவரும் இதய நோய் காரணமாக இறக்கின்றனர். அதாவது, சராசரியாக தினமும் இதய நோய்க்கு 250 பேர் பலியாகின்றனர். கடைசி நேரம் வரை அறிகுறி எதுவும் இருக்காது.

 திடீரென தாக்கும் என்பதால் இதய நோய்கள் ‘சைலன்ட் கில்லர்’ எனப்படுகின்றன. எனவே, இதய நோய்கள் ஏற்படுவதற்கான மூல காரணத்தை கண்டறிந்து அதிலிருந்தே சிகிச்சையை தொடங்குவது அவசியமாகிறது.இவற்றை கருத்தில் கொண்டு, 7 கட்டளைகளை பின்பற்றினால் ரத்த ஓட்டம் உள்பட இதயம் தொடர்பான அனைத்து பாதிப்புகளையும் தவிர்க்கலாம்.


  • நமது வயது, உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரிப்பது. எடை குறைந்தால், சத்தான ஆகாரம் சேர்த்துக் கொள்வது. 
  • எடை அதிகரித்தால் உடற்பயிற்சிகளை அதிகரித்து எடையை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது.
  • புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது.
  • சீரான இடைவெளியில் இரத்த பரிசோதனைகள் செய்து கொலஸ்ட்ரால் அளவை தெரிந்துகொள்வது. உடலின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைப்பது.
  • இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது. 
  • ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட்டு டயட் கடைபிடிப்பது.
  • எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது.


இந்த 7 கட்டளைகளும் நம் அன்றாட வாழ்வில் எளிதாக கடைபிடிக்க கூடியவை. இவற்றை தவறாது பின்பற்றினால் 90 வயது மட்டுமல்ல.. 100 வயது வரைகூட ஆரோக்கியமாக வாழ முடியும்.