இயக்குனரானால் விஜய்யை இயக்குவேன் - தனுஷ்

'துள்ளுவதோ இளமை' படத்தில் பள்ளி மாணவனாக நடித்து அறிமுகமான
தனுஷ், இப்போது பல்கலை மாணவனாக மாறிவிட்டார். பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என திரையுலகில் அவருடைய பாதையை கமல்ஹாசன் வழிக்கு மாறி விட்டாரோ என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது. 'வேலையில்லா பட்டதாரி' படத்தைக் கூட தனுஷ்தான் இயக்கினார் என்று கூட ஒரு பேச்சு அடிபட்டது. குடும்பமே சினிமாக் குடும்பம் என்பதால் சினிமாவில் தனுஷின் ஈடுபாடு அதிகமிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

நேற்று ஒரு சிறுவர் சிறுமியர் கலந்து கொள்ளும் ஒரு தொலைக்காட்சியின் இசை நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார், ரசிகர்களுடன் டிவிட்டர் வலைத்தளத்திலும் சாட் செய்தார். அதில் அவர் தெரிவித்ததாவது, “என்னை எல்லாரும் நல்லா பாடறன்னு சொல்றாங்க, ஆனால் நான் பாடறதுலாம் பாட்டு இல்லைங்க. இங்க சின்னச் சின்னப் பசங்க பாடறதையெல்லாம் பார்க்கும் போது எனக்கே ஒரு மாதிரி இருக்கு.
அதே மாதிரி பாட்டா நான் எழுதறதுலாம் எழுத்தாகிவிடாது,” என தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசினார். டிவிட்டர் சாட்டிங்கில், இயக்குனரானால், விஜய்யை இயக்குவீர்களா என ஒரு ரசிகர் கேட்டார். “எனக்கும் இயக்குனர் ஆகணும்னு ஆசை இருக்கு, எப்ப அதுக்கு எனக்கு தகுதி வருதோ அப்ப இயக்குனர் ஆவேன். அப்ப விஜய் சாரை இயக்கத் தயார். என்னோட கதை பிடிச்சு அவர் நடிக்க கால்ஷீட் கொடுத்தால் கண்டிப்பா இயக்குவேன்,” என பதிலளித்தார்.