விஜயசேதுபதிக்கு நல்ல தீனி போட்டிருக்கிறேன்! - வன்மம் டைரக்டர் ஜெயகிருஷ்ணா

கமல்ஹாசன், ஆர்.கே.செல்வமணி என பலரிடத்தில் கடந்த 25 வருடங்களாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் டைரக்டர் ஜெயகிருஷ்ணா. இவர் இயக்கியுள்ள வன்மம் படத்தில் விஜயசேதுபதி-கிருஷ்ணா- சுனைனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இப்படம் பற்றி டைரக்டர் ஜெயகிருஷ்ணா கூறும்போதுஇன்றைக்கு அப்டேட்டில் இருக்கும் இரண்டு ஹீரோக்கள் என் இயக்கத்தில் நடித்திருக்கிறார்கள் என்றால், எனது ஸ்கிரிப்ட் அவர்களுக்கு மிகவும் பிடித்ததுதான் காரணம். இந்த வன்மம் படத்தின் கதை நட்பு, காதல், எமோஷன், காமெடி, செண்டிமென்ட் என அனைத்து விசயங்களும் கலந்தது.

விஜயசேதுபதி ஒரு மெச்சூரிட்டியான கேரக்டரில் நடித்துள்ளார். கிருஷ்ணா ஒரு ப்ளேபாய் கேரக்டர். எதையுமே யோசித்து ஒரு விசயத்தில் இறங்கக்கூடியவர் விஜயசேதுபதி, ஆனால் எதையும் யோசிக்காமல் இறங்கி விடக்கூடியவர் கிருஷ்ணா. இதுதான் படத்தில் அவர்களது கதாபாத்திரம்.
  •   விஜயசேதுபதி மற்ற ஹீரோக்களிடமிருந்து மாறுபட்ட புதுமையான கதைகளாக செலக்ட் பண்ணுகிறாரே. அவருக்கு உங்கள் கதையில் பிடித்த விசயம் என்ன?
இதுவரை அவர் நடித்த எல்லா படங்களிலுமே வித்தியாசமாகத்தான் நடித்திருக்கிறார். நான் அதிலிருந்து இன்னும் வித்தியாசமாக வேறு டைமன்சனில் இந்த படத்தில் காட்டுகிறேன். அவரை முழுமையான ஒரு ஆக்சன் ஹீரோவாக மாற்றியிருக்கிறேன். மேலும், ஒரு முழுமையான பர்பாமென்ஸ் பண்ற ஹீரோவாக அவருக்கு இந்த படத்தில் முழு தீனி கொடுத்திருக்கிறேன். இதுவரை அவர் நடித்த எல்லா படங்களிலுமே நன்றாக நடித்திருக்கலாம். ஆனால் இந்த படத்தில் இன்னும் அவர் நன்றாக நடித்திருப்பதாக நினைக்கிறேன். நான் கொடுத்த நல்ல சாப்பாடு அவருக்கு பிடித்திருந்தது.
  •  விஜயசேதுபதி மூலம் மெசேஜ் எதுவும் சொல்கிறீர்களா?
இந்த கதையில் மெசேஜ் எதுவும் கிடையாது. நாம பேசக்கூடிய வார்த்தைக்கு ஒரு மரியாதை உண்டு. அதை வெளியில் விட்டுட்டோம்னா அந்த வார்த்தைக்கு நாம அடிமை. விடாத வரைக்கும் அந்த வார்த்தைக்கு நாம சொந்தக்காரன். இதைத்தான் இந்த படத்தில் முக்கியாக சொல்லியிருக்கிறேன். ஒரு சின்ன வார்த்தை அதனால் ஏற்படும் விளைவுகள்தான் இந்த படம். ஒவ்வொருத்தருமே வார்த்தையை கவனமாக பேசவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் இதை மெசேஜாக சொல்லவில்லை. படம் பார்க்கும்பேது ரசிகர்களே புரிந்து கொள்வார்கள்.
மேலும், வன்மம் என்றால் பகைமை உணர்வு, ஒருவர் மீது வன்மம் உணர்வு வந்துவிட்டால் அது பழிவாங்க எப்படியெல்லாம் தலைதூக்கி கொண்டேயிருக்கும் என்பதையும் சொல்லும் இப்படம் நாகர்கோயில் ஸ்லாங்கில் உருவாகியிருக்கிறது. நாகர்கோயில் தமிழ் பேசி நடிப்பது பெரிய சேலஞ்சிங்காக இருந்தது என்று விஜயசேதுபதி கூறினார்.

  •        25 வருடங்களாக எப்படி உங்களை அப்டேட் செய்து கொண்டிருந்தீர்கள்?
25 வருடமாக நம்பிக்கையோடுதான் வாழ்ந்து கொண்டிருந்தேன். வேறு எதைப்பற்றியும் யோசிக்கவே இல்லை. லேட்டானதே தவிர எந்த காலத்திலும் நான் தளர்ந்தது கிடையாது. மனசுக்குள் ஒரு நெருடல் இருந்ததே தவிர, கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்து கொண்டேயிருந்தது.
மேலும், எனது பழக்கவழக்கங்கள். நினைக்கிற விசயங்கள் எல்லாமே அப்டேட்டாகவே இருக்கும். பழசையே நான் நினைத்துக்கொண்டிருப்பதில்லை. அதே மாதிரி நண்பர்கள் சர்க்கிலும் யூத்தாகவே இருப்பார்கள்.. காலங்களுக்கேற்ப என்னை மாற்றிக்கொண்டு அப்டேடடாகிக் கொண்டேயிருந்தேன். அதனால் அப்டேட் என்ற விசயத்தில் எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. மற்றவர்கள்தான் ஆச்சர்யப்பட்டார்கள்.
  •     சுனைனாவை குளிக்க வைத்திருக்கிறீர்களாமே?
அதெல்லாம் இல்லை. பாடல் காட்சிக்கு ஒரு லீடு தேவைப்பட்டது. அந்த பெண் காதலனின் நினைவிலேயே இருந்தாள். குளித்துக்கொண்டிருக்கும் போது அவனது ஞாபகம் வந்தது என்பதற்காக அப்படியொரு காட்சி வைத்திருக்கிறேன். மற்றபடி சுனைனா ஹோம்லியாகத்தான் நடித்திருக்கிறார்
  •       இந்த படத்தின் வெற்றியை எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறீர்கள்?
சினிமாவுக்கு வந்து 25 வருடங்களுக்கு பிறகு எனக்கு சான்ஸ் கிடைத்திருக்கிறது என்றால். நல்ல கதை என்றுதான் அர்த்தம். அதோடு இரண்டு அப்டேட் ஹீரோக்கள் இந்த கதைக்குள் வந்தபோதே படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது. அதனால் வன்மம் படம் மிகப்பெரிய வெற்றி அடையும். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்கிறார் டைரக்டர் ஜெய கிருஷ்ணா.