மனசுக்கு பிடித்தவர்களுக்கு ரஜினி வழங்கும் ஆன்மீக பரிசு!

நீண்டகாலமாக ஆன்மீகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு வருகிறார் ரஜினி. அவர் தீவிர ஆன்மீக சிந்தனையில் தன்னை இணைத்துக்கொண்ட பிறகுதான், தான் நடிக்கும் படங்களில் அரசியல் டயலாக்குகளை குறைத்தார். அதோடு, அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதையும் நிறுத்தினார். அது மட்டுமின்றி, நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று யாருக்கும் தெரியாது. ஆனா சரியான நேரத்துல வருவேன் என்று எதிர்கால அரசியல் என்ட்ரி குறித்தும் பேசி வந்தவர், பின்னர் அந்த பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

சமீபகாலமாக, எந்த மேடைகளுக்கு சென்றாலும் அரசியல் பேசுவதில்லை. அரசியல்வாதிகளே தன்னை சந்தித்தாலும் அவர்களிடம் அரசியல் பேசுவதில்லை. மாறாக ஆன்மீகம் பேசுகிறார். அதோடு படப்பிடிப்பு தளங்களில் முன்பெல்லாம் தனது ஆரம்ப கால கதைகளை ஜூனியர் நடிகர் நடிகைகளிடம் பேசி வந்த ரஜினி, இப்போது இளவட்டங்களுடன் அமர்ந்தாலும் ஆன்மீகம் பற்றித்தான் பேசுகிறார்.


அந்த வகையில், தனது மனசுக்கு பிடித்த நடிகர் நடிகைகள் என்றால் அவர்களுக்கு ஆன்மீக உபதேசம் செய்வதோடு, தி ஹிமாலயன் மாஸ்டர் என்ற ஆன்மீக புத்தகத்தையும் பரிசாக வழங்குகிறார். அப்படி தமிழ் நடிகர்களில் அஜீத்துக்கு முதலில் அந்த புத்தகத்தை வழங்கிய ரஜினி, லிங்கா படப்பிடிப்பில் இருந்தபோது ஒருநாள் சந்தானத்துக்கும் அந்த புத்தகத்தை பரிசளித்திருக்கிறாராம். இதையடுத்து சந்தானம் விடுத்துள்ள செய்தியில், ரஜினி சார் மாதிரி ஒரு எளிமையான மனிதரை பார்ப்பதே அரிது. அதிலும் அவர் ஆன்மீகம் பற்றி பேசத் தொடங்கி விட்டால் மனசு அதில் லயித்து விடுகிறது. அப்படி ஏராளமான ஆன்மீக ஆலோசனைகளை எனக்கு அளித்த ரஜினி சார், இப்போது தி ஹிமாலயன் மாஸ்டர் என்ற புத்தகத்தை கொடுத்துள்ளார். அதை படித்து அதன்படி என் வாழ்நாளில் நடக்கவும் முடிவு செய்திருக்கிறேன் என்கிறார்.