கோடிகளில் சம்பளம் கேட்டு கெடுபிடி செய்யவில்லை! -காஜல்அகர்வால்.

துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா என வரிசையாக நடித்து வந்த காஜல்அகர்வாலை, அதிக சம்பளம் கேட்பதாக அதன்பிறகு யாரும் அவரை புக் பண்ணவில்லை. ஆனபோதும், உதயநிதி மட்டும் தனது நண்பேன்டா படத்திற்கு 40 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தார். ஆனால் பின்னர் தான் கேட்ட நேரத்தில் அவர் கால்சீட் தரவில்லை என்று அவருக்கு பதிலாக நயன்தாராவை புக் பண்ணி படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்.

அதையடுத்து, தான் கொடுத்த 40 லட்சம் அட்வான்சை உதயநிதி கேட்டபோது, கொடுக்க மறுத்த காஜல்அகர்வாலிடம் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஏற்கனவே காஜல் மீது அதிருப்தியில் இருந்த கோலிவுட் படாதிபதிகள் இப்போது இன்னும் அதிருப்தியில் உள்ளனர். இதையடுத்து காஜல்அகர்வால் விடுத்துள்ள செய்தியில், நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமும் இத்தனை கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டதே இல்லை.


எனது படங்களின் வெற்றியை பொறுத்து அவர்களாக தருவதைத்தான் நான் வாங்கிக்கொண்டு வருகிறேன். ஆனால் நான் படத்துக்குப்படம் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போவதாக என்னைப்பற்றி ஒரு தவறான வதந்தி கோடம்பாக்கத்தில் பரவிக்கொண்டிருக்கிறது.அதை அனைவரும் உண்மை என்றும் நம்பி என்னை அணுகவே தயங்கி நிற்கிறார்கள்.

மேலும், நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும், வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது. அதோடு, எங்களுக்குத் தேவையான காஸ்டியூம்ஸ், மேக்கப் சாதனங்கள் போன்றவை வாங்குவதற்கே நாங்கள் பெருந்தொகை செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. இந்த செலவெல்லாம் போக மீதமுள்ள பணத்தைதான் எதிர்காலத்திற்காக சேர்த்து வைக்க வேண்டும் என்று சொல்லும் காஜல்அகர்வால், என் மீது படிந்திருக்கும் இந்த வதந்தியில் இருந்து விடுபட, தற்போது சில படஅதிபர்களை சந்தித்து தெளிவுபடுத்தி வருகிறேன் என்கிறார்.