அஜீத் படத்திலும் 3வது நாயகியான பார்வதி நாயர்!

மலையாளம், கன்னடத்தில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்துவிட்டு தமிழுக்கு வந்திருப்பவர் பார்வதி நாயர். ஏற்கனவே ஜெயம்ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்த இவர், அதையடுத்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்துள்ள உத்தமவில்லன் படத்தில் நடித்திருக்கிறார். இதே படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா என இரண்டு விஸ்வரூபம் பட நாயகிகள் நடித்திருக்கிறார்கள்.

இருப்பினும், அந்த படத்தில் மூன்றாவது நாயகி போன்று ஒரு வித்தியாசமான வேடத்தில் பார்வதி நாயரும் நடித்திருக்கிறார். அதோடு, இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, கெளதம்மேனன் இயக்கத்தில், அஜீத் நடித்து வரும் அவரது 55வது படத்திலும் பார்வதி நாயருக்கும் ஒரு கேரக்டர் கிடைக்க அந்த வேடத்திலும் நடித்து விட்டார். மேலும், இந்த படத்திலும் த்ரிஷா, அனுஷ்கா என இரண்டு மெகா நடிகைகள் இருக்க, 3வது நாயகி ரோலுக்கே கமிட்டாகியிருக்கிறாராம் பார்வதி நாயர்.

இதுபற்றி அவர் கூறுகையில், மலையாளம், கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்த எனக்கு தமிழில் இந்த வாய்ப்புகள் கிடைத்தபோது, சிறிய வேடங்கள் என்றபோதும், கமல், அஜீத் என இரண்டுமே பெரிய ஹீரோக்களின் படங்கள் என்பதால் 3வது நாயகியாக நடிக்க ஒத்துக்கொண்டேன். அதோடு, தமிழுக்கு வந்த வேகத்திலேயே கமல், அஜீத் என்ற எனது பேவரிட் ஹீரோக்களுடனும் நடித்து விட்டது பெரிய மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் 3 வது நாயகி வேடம் என்கிற தாழ்வுமனப்பான்மை என்னை விட்டு போய் விட்டது என்கிறார் பார்வதி நாயர்.