கடுகின் மருத்துவ குணம்.

“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது”. இது அனைவரும் அறிந்த பழமொழி. கடுகு சிறியதானாலும், உணவிற்கு அது ஊட்டும் மணம், சுவை பெரிது.
கடுகு சிறு செடி வகை, உயரம் 0.5 மீட்டரிலிருந்து 1.3 மீட்டர் வரை இருக்கும். இலைகள் கோள வடிவில், நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். விதைகள் சிறியதாக, உருண்டையாக, சிவப்பு, பழுப்பு, கருநிறங்களில் இருக்கும். கடுகில் மூன்று வகை உண்டு.
அவை சிறிய செங்கடுகு (கருங்கடுகு) பெரிய செங்கடுகு, வெண் கடுகு.
சமையலில் கடுகு தாளிதம் செய்வதற்கு இன்றியமையாதது ஒரு வாசனைப் பொருள் தாளிக்கவில்லையென்றால், நமது சாம்பார், ரசம், களி இவை முழுமையான சுவையை பெறாது. கடுகில்லாமல் நம் நாட்டு சமையலைறகள் இருக்காது. கரண்டியில் சிறிது எண்ணையைக் காய்ச்சி, 1 தேக்கரண்டி கடுகு போட்டால், அது வெடித்து காரசாரமான நெடியை வெளிப்படுத்தும். அப்படியே எண்ணையை கடுகுடன் தாளிதம் செய்ய வேண்டிய சாம்பார், ரசம், கறி இவற்றில் கொட்ட வேண்டியது தான்.

கடுகின் பயன்கள்.

வெளிப்பூச்சுக்கு – கடுகெண்ணை மூட்டுவலிக்கு நல்ல மருந்து. சூடாக்கி  பாதிக்கப்பட்ட மூட்டுக்களில் தடவி ஒத்தடம் கொடுக்க வலி குறையும்.

கடுகை அரைத்து பற்றுப் போட வலிகள் குறையும். ஆனால் எரிச்சல் தொடர்ந்தால் பற்றை அகற்றவும். அதிகமான பற்று கொப்புளங்களை உண்டாக்கும்.

கடுகு ஜீரணத்தை மேம்படுத்தும்.
எனவே அஜீரணத்திற்கு, கடுகு நல்ல மருந்து தான்.
ஆனால் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால், பேதியை தூண்டிவிடும்.

சரும நோய்களுக்கு கடுகு நல்ல மருந்து. படர் தாமரை போக, கடுகை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம்.

ஒரு டீஸ்பூன் கடுகை பொடி செய்து, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து வடிகட்டி, கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் விக்கல் நீங்கும்.

சித்த வைத்தியம் சொல்லும் கடுகின் குணங்கள்.
வாந்தியுண்டாக்கும்
வெப்பமுண்டாக்கும்
கொப்புள மெழிப்பி
சர்மத்திற்கு வெப்பமூட்டும், அரிப்பை தேற்றிவிட்டு மேலும் தீவிரமான தசை வலிகளை குறைக்கும்.
ஜீரணம் உண்டாக்கும்
சிறுநீர் பெருக்கி
இருமல், மூக்கில் நீர் வடிதல், விக்கல், கோழை, வயிற்றுவலி, கீல்
வாயு, செரியாமை, தலைசுற்றல் இவற்றை போக்கும்.

கடுகின் குறைபாடுகள்

கடுகை பச்சையாக சேர்த்தரைத்த உணவுப் பொருட்கள் வயிற்றில் வேக்காளத்தை உண்டாக்கும். கடுகுக் கீரை ஜீரணத்தை பாதிக்கலாம். இதை தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப உபயோகிக்க வேண்டும்