வெண்டைக்காய் மூட்டு தேய்மான நோயை கட்டுப்படுத்தும்.

வெண்டைக்காயில் பொதிந்திருக்கும் முதல் தரமான நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உணவுப் பாதையை ஒழுங்காக இயங்கச் செய்து குடல் அதிக அளவில் சர்க்கரைச் சத்தை கிரகித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறது. கரையும் தன்மையுள்ள கரையாத்தன்மையுள்ள இருவித நார்ச்சத்தை வெண்டைக்காய் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெண்டைக்காயில் மண்டிக்கிடக்கும் கொழகொழப்புமிக்க சவ்வுத் தன்மை இரத்தத்தில் கொழுப்புத்தன்மை மற்றும் பித்த நீர் அதிகரிக்கா வண்ணம் அவற்றை ஈரலின் துணை கொண்டு கட்டுப்படுத்துகிறது.
வெண்டைக்காய் ஒரு சிறந்த மலமிளக்கியாகவும் பயன் தருகிறது. வெண்டைக்காயிலுள்ள வழவழப்புப்பொருள் பெருங்குடலின் உட்பகுதியில் பதிந்து பெருங்குடலின் செயலைச் செம்மைப்படுத்துகிறது. இயந்திரத்துக்கு எண்ணெய் இடுவதுபோல இது பெருங்குடலுக்கு ஒரு எண்ணெய் போல (லுப்ரிகேஷன்) பயன் தருகிறது. வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்தானது குடலில் உள்ள, நீரை உறிஞ்சி எடுத்துக் கொண்டு மலத்தை சிறிது கட்டும்படி செய்கிறது. இதனால் மலம் நீர்த்து பேதியாகாமல் கெட்டியாக போக உதவுகிறது. மேலும் இதனால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. மற்ற மலமிளக்கிகளைப் போலல்லாமல் குடலுக்கு துன்பம் தராமல், குடலை எரிச்சலாக்கிப் புண்படுத்தாமல் மிக்க பாதுகாப்பான மலமிளக்கியாகச் செயல்படுகிறது.

வெண்டைக்காயிலுள்ள வழுவழுப்பான திரவம் கொழுப்புச் சத்தையும் உணவிலுள்ள நச்சுப்பொருள்களையும், பித்த நீரையும் கட்டுப்படுத்தி வெளியேற்ற் வல்லது. இதனால் குடலில் ஏற்படுகிற பல்வேறு நோய்கள் தவிர்க்கப்படுகிறது. வெண்டைக்காய் ஒரு ஆரோக்கியத்தின் காவலனாக செயல்பட்டு தேவையின்றி தேங்கும் கழிவுகளையும் நச்சுத்தன்மையும் உடலை விட்டு வெளியேற உதவுகிறது. வெண்டைக்காயில் பகுதியாக உள்ள உடலுக்குத் தேவையான நல்ல உயிர் அணுக்களுக்கு ஊட்டம் தருவதாக அமைகிறது. இந்த பாக்டீரியாக்களால் சீரண உறுப்புக்கள் சீராக நடைபெற ஏதுவாகிறது. வெண்டைக்காயில் பொதிந்து இருக்கும் சத்துக்கள் அத்தனையும் உடலாலும் மனதாலும் பலவீனமானவர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக அமைகிறது. பலவீனத்தையும் சோர்வையும் போக்குவது மட்டுமின்றி மனதுக்கு உற்சாகம் தருவதாகவும் மனஅழுத்தத்தைக் குறைக்கவல்லதாகவும் விளங்குகிறது.

வெண்டைக்காய் புண்களை அகற்றும் தன்மை வாய்ந்தது. மூட்டுக்களில் ஏற்படும் தேய்மானத்தையும், மூட்டுத் தேய்வால் ஏற்பட்ட காயத்தையும் குணப்படுத்தி மூட்டுக்கள் சரிவர இயங்குவதற்கு உபயோகப்படுகிறது. வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மை குடலின் உட்பகுதியில் படிந்து குடல் புண்ணாகாமல் பாதுகாப்பதோடு புண்களையும் ஆற்றுகிறது. மேலும் குடலில் அமிலத் தன்மையை செயல் இழக்கச் செய்கிறது. வெண்டைக்காய் நூரையீரல் வீக்கத்தையயும், மூச்சு விடுவதில் சிரமத்தையும் தணிக்க வல்லது. வயிற்றுக் கடுப்பு ஏற்படுவதும் அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுவதும் வெண்டைக்காயால் தணிகிறது என்று நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் தொணடைக்கட்டு தொணடைக்கம்மல், தொண்டைப்புண்களையும் ஆற்ற வல்லது. கோடை காலத்தில் ஏற்படும் பல்வேறு நோய்களை தணிக்க வல்லதாக வெண்டைக்காய் உள்ளது. வெண்டைக்காயிலுள்ள விட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தரவல்லது. மேலும் சேர்வினை போக்ககூடியது. வீக்கத்தைத் தணிக்க வல்லது. அதுமட்டுமின்றி ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோயைத் தணிக்கக் கூடியது. வெண்டைக்காயை அன்றாடம் உணவில் சேர்ப்பதால் இரத்த நாளங்கள், நரம்புகள் ஆகியவற்றின் வீக்கம், அடைப்பு ஆகியவை வராமல் தடுப்பதோடு வந்த பின்னும் குணப்படுத்தவல்ல மருந்தாக பணி செய்யும்.

வெண்டைக்காயைத் தாராளமாக உபயோகப்படுத்துவதால் சிலவகை புற்நோய்களைக் கட்டுப்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மலக்குடலுக்கும் ஆசன வாய்க்கும் இடையே மலம் தங்குவதால் ஏற்படும் புற்றுக்கு ஒரு மருந்தாக அமைகின்றது. வெண்டைக்காயில் உள்ள மருத்துவ வேதிப்பொருள்கள் முடி போன்ற சிறுசிறு ரத்த நாளங்களை ஆரோக்கியமாகச் செயல்பட வைக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியமும் மட்டுமின்றி தோலும் மென்மையும் பளபளப்பும் பெறுகிறது. வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள் கண்தெளிவு பெறவும் நல்ல மருந்தாகிறது. அன்றாடம் 2 அல்லது 3 என்கிற எண்ணிக்கையில் வெண்டைக்காயைச் சாப்பிடுவதால் கண்புரை வருவது ஓரளவு தவிர்க்கப்படுகிறது என்று நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதற்கும் வெண்டைக்காய் மருந்தாகிறது.

 வெண்டைக்காயை உண்பதோடு அதன் வழவழப்பான சத்துவத்தை மேற்பூச்சாகப் பயன்படுத்துவதால் முகப்பருக்கள் மறைவதோடு முகம் பளிச்சென்று இருக்க உதவுகிறது. மென்மையானதும் அழகானதுமான தோலுக்கு வெண்டைக்காய் உணவு வழி செய்கிறது. மனித உடலின் இணைப்புப் பகுதிகளான மூட்டுக்களில் தேய்மானம் ஆகாமல் இருப்பதற்கென இறைவன் ஓர்வித வழவழப்பான திரவத்தைச் சுரக்கச் செய்துள்ளான். அது சினோவியில் புளூயிட் என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படுகிறது. எப்போது இந்த சுரப்பி சரிவர வேலை செய்யவில்லையோ அப்போது வெண்டைக்காய் கைகொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உணவில் தாராளமாக வெண்டைக்காயைச் சேர்த்துக் கொள்வதால் தேய்ந்துபோன மூட்டுகளுக்குத் தெம்பாயும் போதிய சத்தையும் பெற இயலும்.