தனியாக இருப்பதே மகிழ்ச்சி - பிரபுதேவா பேட்டி!

நடன அமைப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறி, இப்போது இயக்குநராக உயர்ந்துள்ள பிரபுதேவா, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களிலும் முன்னணி இயக்குநராக விளங்கி வருகிறார். பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் பிரபுதேவாவும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

இதனிடையே இவர், அஜய் தேவ்கானை வைத்து இயக்கியுள்ள ''ஆக்ஷ்ன் ஜாக்ஷ்ன்'' படம் தொடர்பாக சென்னை வந்திருந்தார்.
அப்போது, சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற பிரபுதேவா பேசியதாவது, தமிழ் படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கிறது.
இங்குள்ள ஹீரோக்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். பாலிவுட் சினிமா, தமிழ் படங்களை உற்று நோக்கி கவனிக்கிறது. அதனால் மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறது. நல்ல கதை அமைந்தால் நடிப்பேன். ஒருபோதும் தமிழ் சினிமாவை மறக்க மாட்டேன். எதிர்காலத்தில் பட நிறுவனம் தொடங்கி, நல்ல தமிழ் படங்களையும் எடுக்கும் எண்ணம் உள்ளது. எனக்கு விருது வாங்கும் படங்களை இயக்கும் ஆசையில்லை, கமர்ஷியல் படங்களை மட்டுமே எடுக்க விரும்புகிறேன்.
தற்போது நான் இயக்கி வரும் ஆக்ஷ்ன் ஜாக்ஷ்ன் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து அக்ஷ்ய் குமாரை வைத்து ஒரு படம் இயக்குகிறேன். இதுதவிர ஏ.பி.சி.டி. இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறேன். தற்போது எனது சினிமா வாழ்க்கை பிஸியாக சென்று கொண்டு இருக்கிறது என்று கூறிய பிரபுதேவாவிடம், மீண்டும் திருமணம் செய்து கொள்ள எண்ணம் இருக்கிறதா என பத்திரிகையாளர் கேட்க, அதற்கு பிரபுதேவா அப்படி ஒரு எண்ணம் இல்லை, தனியாக வாழ்வதே இப்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.