சிரஞ்சீவி எனக்கு முன்னுதாரணம்...சூர்யா பேச்சு...

அஞ்சான்' படத்தின் பிரமோஷனுக்காக பல ஊர்களுக்குச் சுற்றி வருகிறார் சூர்யா. சென்னையில் ஆரம்பமான இசை வெளியீடு, அடுத்து ஹைதராபாத்தில் நடந்தது, பின்னர் கொச்சிக்குச் சென்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த சூர்யா, நேற்று விசாகப்பட்டிணத்தில் நடந்த 'சிக்கந்தர்' படத்தின் இசை வெற்றி விழாவில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் இயக்குனர் லிங்குசாமி, 'சிக்கந்தர்' படத்தை தெலுங்கில் வெளியிடும் தயாரிப்பாளர் லகடபதி ஸ்ரீதர், நடிகை பூனம் கௌர், மற்றும் பலர் கலந்து கொண்டனர். 'அஞ்சான்' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'சிக்கந்தர்' 15ம் தேதி வெளிவருகிறது.


விசாகப்பட்டிணத்தில் திரண்ட எண்ணற்ற ரசிகர்களின் மத்தியில் தெலுங்கில் பேசினார் சூர்யா. இசை வெளியீட்டின் போது அவர் ஆங்கிலத்தில்தான் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் சில பெண் ரசிகைகள் கேட்ட கேள்விகளுக்கும் சூர்யா பதிலளித்தார். “சிரஞ்சீவி அவர்களின் ரத்த தான வங்கியைப் பற்றிக் கேள்விப்பட்டதும் தான் என்னுடைய 'அகரம்' அறக்கட்டளை மூலம் இந்த சமுதாயத்திற்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் பிறகுதான் படிக்க வசதியில்லாத ஏழை மக்களை படிக்க வைக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு ஏற்பட்டது.
'சிக்கந்தர்' படத்தின் பாடல்களுக்கு வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. இந்த விசாகப்பட்டிணத்தை என்னால் மறக்கவே முடியாது. இங்கு படப்பிடிப்பில் இருக்கும் போதுதான், பெற்றோர் போன் செய்து எனது திருமணம் நடக்கும் தேதியைப் பற்றி எனக்குத் தெரிவித்தனர். பல படங்களில் நடிப்பதற்காக இங்கு வந்திருக்கிறேன்,” என்றார்.
நிகழ்ச்சியில் உரையாற்றி தயாரிப்பாளர் ஸ்ரீதர் “தமிழில் 100 கோடி ரூபாயும், தெலுங்கில் 50 கோடி ரூபாயும் வசூலாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சூர்யா இந்தப் படத்தின் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டாராக வருவார்,” என்றார்.