ஜிகர்தண்டா ரிலீஸ் ஒத்திவைப்பு ! - ஆத்திரமடைந்த சித்தார்த்...!!

கதாநாயக நடிகர்களில் சித்தார்த் துணிச்சலானவர். மனதில் பட்டத்தை பேசிவிடுவார். அதனால் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளை ஏராளம். அவர் நடித்து இந்த வாரம் வெளிவரவிருந்த ஜிகர்தண்டா படத்தை வெளியிடவிடாமல் தனுஷ் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக ஒரு தகவல் கோலிவுட்டில் வெளியாகியுள்ளது.

இதனால் செம கடுப்பில் இருக்கிறார் சித்தார்த். தன் டுவிட்டர் பக்கத்தில் நிமிடத்துக்கு நிமிடம் பதிவுகளைப் போட்டு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.


தனது டுவிட்டர் பக்கத்தில் சித்தார்த் எழுதியதை படியுங்கள்....

ஜிகர்தண்டா ரசிகர்களே.. வெளியில் இருந்து வரும் சில ஏற்கத்தகாத அழுத்தங்களால், எங்களது படத்தை வெளியிடுவதில் தடை நீடித்து வருகிறது. டைரக்டர் கார்த்திக் சுப்பாராஜ் மற்றும் எங்களது ஜிகிர்தண்டா படக்குழு முழுவதும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளது. ஆனால் எங்கள் எவரையும் ஆலோசிக்காமல், படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துள்ளது நியாயமற்ற செயல். இது போன்ற மோசமான எண்ணங்களால், எங்கள் படத்தின் ரிலீஸை வேண்டுமானால் தள்ளி வைக்கலாம். ஆனால் படம் வெளிவருவதை யாராலும் தடுக்க முடியாது. ஒரு நல்லப் படத்தை யாராலும் வீழ்த்தவும் முடியாது.



நாங்கள் எந்தவிதமான உதவியும் இன்றி நிற்கிறோம். சினிமா ரசிகர்கள் அனைவரும் எங்கள் படத்திற்கும், எங்கள் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கும் ஆதரவு தர வேண்டும். ஜிகர்தண்டா எப்போது ரிலீஸ் ஆனாலும், உங்களது ஆதரவு தேவை. சினிமாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். ஓர் அதிசயம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். ஜிகர்தண்டா விரைவில் வெளியாக வேண்டும். ஜிகர்தண்டாவின் தயாரிப்பாளர், தனது தனிப்பட்ட முறையில், ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு குறித்து மற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் எங்களுக்கு எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை. - என்று டுவீட் பண்ணி இருக்கிறார் சித்தார்த்.

இப்படி எல்லாம் ஜிகர்தண்டா படத்தின் தயாரிப்பாளரை நேரடியாகவும், இந்த பிரச்சனைக்கு காரணமான தனுஷை மறைமுகமாகவும் தாக்கி வருகிறார் சித்தார்த்.
அது மட்டுமல்ல, தன் படத்தை தள்ளி வைக்க சொல்ல தனுஷ் யார்? என்று கோபாவேசமாக தன் நண்பர்கள் மத்தியில் பொங்க வரும் சித்தார்த், தனுஷுக்கு எதிராக மிகப்பெரிய யுத்தத்தையும் தொடங்க உள்ளாராம். சித்தார்த்தின் கோபத்தில் நியாயம் இருப்பதை புரிந்து கொண்ட சில ஹீரோக்கள் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனராம்.