வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துபவன்தான் திறமைசாலி என்பதை நிரூபித்திருக்கிறார் தனுஷ்..!

இந்திய அளவில் தற்போது தனுஷுக்குக் கிடைத்துள்ள பெயரும் புகழும், யாரும் எதிர்பார்க்காததுதான். இன்னும் ஒரு சிலரால் அதை நம்பக் கூட முடியாது. இவரெல்லாம் எப்படி நடிகரானார், இந்த அளவுக்கு வெற்றியைப் பெறுகிறார் என்று அழகான சில இளம் ஹீரோக்கள் பொறாமைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சிலருக்கு திரைப்படங்களில் நடிக்க கிடைக்கும் வாய்ப்பு தெரிந்தோ, தெரியாமலோ கிடைத்தாலும் அதன் பின் கிடைத்த வாய்ப்பில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உச்சத்தில் பறக்க ஆரம்பித்தார்கள். கமல்ஹாசன், பாக்யராஜ் போன்றோரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இவர்களும் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு ஒரு விபத்தாகத்தான் அமைந்தது. அதன் பின் இந்தியாவே போற்றும் கலைஞர்களாக விளங்கி வருகிறார்கள்.
தனுஷுக்கும் 'துள்ளுவதோ இளமை' படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பும் ஒரு விபத்துதான். அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நான்கைந்து இளைஞர்களில் ஒருவர் திடீரென வராமல் போய்விட்டார். அப்போது அந்த படத்தின் இயக்குனரும், தனுஷின் அப்பாவுமான கஸ்தூரிராஜா +1 படித்துக் கொண்டிருந்த தனுஷை வராமல் போனவருக்குப் பதிலாக நடித்திருக்கிறார். அதன் பின் படிப்பையும் பாதியில் விட வேண்டிய சூழ்நிலைய தனுஷுக்கு ஏற்பட்டதாம். ஆனால், தொடர்ந்து அவரை படத்தில் நடிக்க வைக்க யாருமே முன் வரவில்லையாம். தன்னையெல்லாம் சில இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஒரு நடிகனாகவே பார்க்கவில்லை என்கிறார் தனுஷ். தொடர்ந்து படிக்கவும் முடியாமல், நடிக்கவும் முடியாமல் தவித்த தனுஷை, அவருடைய அண்ணன் செல்வராகவன் 'காதல் கொண்டேன்' படத்தில் நாயகனாக்கினார். அந்த படத்தின் வெற்றி தனுஷை ஒரு நாயகனாக நிலை நிறுத்தியது.

இப்போது 'ஆடுகளம்' படத்திற்காக தேசிய விருது, 'ராஞ்சனா' படத்தின் மூலம் ஹிந்தியில் வரவேற்பு, அமிதாப்புடன் 'ஷமிதாப்' என ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்குப் பிறகு இந்திய அளவிலும் உயர்ந்து நிற்கிறார் தனுஷ். கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவனே புத்திசாலி, திறமைசாலி என்பதை தனுஷ் நிரூபித்திருக்கிறார்.

முன்னதாக (ஜூலை 28ம் தேதி) தனது 31வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார். சமீபத்தில் இவரது வேலையில்லா பட்டதாரி படம் ஹிட்டாகி இருப்பதால் அதையும் சேர்த்து இந்த பிறந்தநாள் விழாவில் கொண்டாடினார். இதில், வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்த நடிகர்-நடிகைகளும் கலந்து கொண்டனர்.