அஞ்சான் படத்தை தணிக்கைக்குழுவினர் பார்க்க எதிர்ப்பு!

யுடிவி தயாரிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள அஞ்சான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளிவருகிறது. கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடைபெற்ற அஞ்சான் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் அண்மையில் நிறைவுற்று, படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி தயாராகி உள்ளது. சில தினங்களுக்கு முன் அஞ்சான் படத்தை சூர்யா, லிங்குசாமி உட்பட குறிப்பிட்ட சிலர் பார்த்தனர். படத்தை பார்த்த சூர்யாவுக்கு பரம திருப்தி. சூர்யாவின் பாராட்டைத் தொடர்ந்து படத்தை சென்சாருக்கு அனுப்பும் பணிகளைத் தொடங்கினார்கள்.

அஞ்சான் படத்தை சில தினங்களுக்கு முன் சென்சாருக்கும் அப்ளை பண்ணி இருக்கின்றனர். தணிக்கைக்காக அனுப்பப்பட்ட படங்களை தணிக்கைக்குழுவினர் பார்க்க அப்ளை பண்ணப்பட்ட சீனியாரிட்டி வரிசைப்படி தேதி கொடுக்கப்பட வேண்டும். அஞ்சான் படத்துக்கு முன்பே வேறு பல படங்கள் அப்ளை பண்ணப்பட்டு, அப்படங்களைப் பார்க்க தேதி கொடுக்கப்படாதநிலையில், கடைசியாய் அப்ளை பண்ணப்பட்ட அஞ்சான் படத்துக்கு தேதி கொடுத்திருக்கிறது தணிக்கைக்குழு. அதாவது இன்று அஞ்சான் படத்தைப் பார்க்க இருக்கிறது தணிக்கைக்குழு.


விதியை மீறி அஞ்சான் படத்தை முன் கூட்டியே பார்ப்பதற்கு, ஏற்கனவே படங்களை அப்ளை பண்ணிய தயாரிப்பாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தங்களின் எதிர்ப்பை மீறி அஞ்சான் படத்தை தணிக்கைக்குழுவினர் பார்த்தால், தணிக்கை சான்றிதழை வழங்க தடை கேட்டு வழக்குத்தொடர திட்டமிட்டிருக்கின்றனர். இதற்கிடையில் இந்தப் பிரச்சனையை தவிர்க்க அஞ்சான் படத்தை மும்பையில் தணிக்கை செய்யலாமா என்ற யோசனையிலும் ஈடுபட்டிருக்கிறதாம் யுடிவி நிறுவனம்.