மே, ஜுன், ஜூலை மாதங்கள் பொதுவாக ரம்புட்டான் சீசனாக இருக்கும்.
மல்வான ரம்புட்டான் மிகவும் பிரசித்தமானது.
ரம்புட்டானுக்கு காய்ச்சலா?
சீசன் காலத்தில்
வீதி ஓரமெல்லாம் தற்காலிக கடைகள், லொறிகள் இவற்றில்
எல்லாம் மதாளித்த சிவத்த கம்பளிப் பூச்சிகள் போலப் பழங்கள் குவிந்து கிடக்கும். வழமையான பழக்கடைகளிலும் கூடை நிறைய வைத்திருப்பார்கள்.
பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்களும் ரம்புட்டான் அமுக்குவதில் பின்நிற்பதில்லை. இவ்வாறு ரம்புட்டான் சாப்பிட்டவர்களில் சிலர் காய்ச்சலுடன் வருகிறார்கள். “ரம்புட்டான் காய்ச்சல்” என்று தாங்களாகவே நாமம் சூட்டிவிடுகிறார்கள். அதே வேளை ரம்புட்டான் சாப்பிடாத பலரும் இப் பருவ காலத்தில் காய்ச்சலுடன் வருகிறார்கள்.
காய்ச்சல் என்பது தனி ஒரு நோயல்ல என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். தடிமன், காய்ச்சல், டெங்குக் காய்ச்சல், மலேரியாக் காய்ச்சல், தைபொயிட்
காய்ச்சல் எனப் பலவகை இருக்கின்றன. இவை யாவம் கிருமிகள் தொற்றுவதாலேயே வருகிறது.
ரம்புட்டான் சாப்பிடுவதால் எவ்வித காய்ச்சலும் வருவதில்லை. ஆனால் இது பரவலாகக் கிடைக்கும் காலங்களான ஜுன், ஜூலை மாதங்களில் பெரும்பாலும் தென்னிலங்கையில் மழை பெய்வதுண்டு. வெயிலுடன் மழையும்
மாறி மாறி வரும் இம் மாதங்களில் டெங்கு
முதல் சாதாரண காய்ச்சல்கள் எனப் பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன நுளம்பு கடிப்பதால் டெங்குக் காய்ச்சல், மலேரியா போன்றவை வருகின்றன. எலிகளின் எச்சங்களால் எலிக்காய்ச்சல் பரவுகிறது. நோயுள்ளவர் தும்முவதாலும் இருமுவதாலும் தொற்றுகிறது பன்றிக் காய்ச்சல்.
எப்படி உண்பது
நெல்லிக்காய், மங்குஸ்தான், மாம்பழம், கொய்யாப்பழம் போன்ற எந்தப் பழத்தை வாங்கினாலும் அவற்றை உண்ண முன்னர் நன்கு கழுவிய பின்னரே உண்ண
வேண்டும் என்பது தெரிந்ததே. பழத்தின் உட்புறம் கிருமிகள் தீண்டாது சுத்தமாக இருக்கும் என்ற போதிலும் அவற்றின் தோலானது பலவித அழுக்குகளாலும் கிருமிகளாலும் மாசடைந்திருக்கக் கூடும்.
ஏனெனில் பழங்களை பிடுங்கி நிலத்தில் போட்டிருப்பார்கள்.
நிலத்தில் நாய், பூனை போன்ற பிராணிகளின் மலம், குருவிகளின் எச்சம், மனிதர்களின் கழிவுகள் போன்ற பலவற்றிலிருந்த கிருமிகள் பழத்தின் தோலை மாசுபடுத்தியிருக்கும். பழங்களை பறித்த இடங்களிலிருந்து விற்பனை செய்யும் இடத்திற்கு கொண்டுவரப் பயன்படுத்தும் பைகள் சாக்கு போன்றவற்றில் இருந்தும் கிருமிகள் பரவியிருக்கும். அதேபோல தெருவோரம் வைத்து விற்கும்போதும் காற்றிலிருந்தும் பழங்களைக் கையாளும்
மனிதர்களின் கரங்களிலிருந்தும் பலவிதமான கிருமிகள் அவற்றின் தோலில் படிந்திருக்க வாய்ப்புண்டு.
எனவேதான் ரம்புட்டான் முதல் வேறு எந்தப் பழத்தை வாங்கினாலும் சாப்பிட முன்னர்
நன்கு கழுவவேண்டும். இரண்டு தடவைகளாவது கழுவ வேண்டும். அல்லது ஓடும் நீரில் கழுவ வேண்டும்.
கழுவிய பின்னரும் கூட ரம்புட்டான் தோலை வாயினால் கடிக்க வேண்டாம்.
கத்தியினால் தோலை வெட்டி அகற்றிய பின்னர்
மீண்டும் கைகளை நீரினால் கழுவி அதன் பின்னர் பழத்தை எடுத்து உண்ணுங்கள். சுத்தப்படுத்திய பழங்களைச் சாப்பிடுவதால் நோய்கள் எதுவும்
தொற்றாது. உள்ளிருக்கும் சுளைகள் சுத்தமானவை.
நன்றி : வீரகேசரி