மார்கழி மாதம் என்றாலே பெருமாள் கோயிலும் அங்கு வழங்கப்படும் துளசி தீர்த்தமும் நினைவுக்கு வரும். திருமாலின் மார்பில் மாலையாகவும், பக்தர்களுக்கு துளசியிலையாகவும், துளசி தீர்த்தமாகவும் வழங்கப்பெறும். மகாலட்சுமியின் இருப்பிடமாக விளங்கும் துளசி, குளிர் மற்றும் பனி காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை தீர்க்கும் அரு மருந்தாகவும் விளங்குகிறது. கற்பூர மணத்துடனும் கதிர் போன்ற பூங்கொத்துகளை உடைய சிறு செடியாகும்.
இதற்கு காரமுவுண்டு 2 அடிமுதல் 3 அடி வரை வளரக்கூடியது. தமிழகம் புதுவை மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் வளர்கிறது. இதில் நற்றுளசி, நாய்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி, செந்துளசி, நிலத்துளசி உட்பட பல வகைகள் உண்டு. கோழையகற்றுதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல், வியர்வைபெருக்கும் குணங்கள் கொண்டது.
நற்றுளசி: இதனால் வயிற்றுளைச்சல், எலும்பை பற்றிய சுரம், நீர்வேட்கை, மாந்தம், சுவையின்மை நீங்கும். உடலுக்கு வெப்பத்தை தரும். துளசியிலை 50 கிராம், மிளகு 20கிராம் மையாய் அரைத்து பயிறளவு மாத்திரையாக்கிக் காலை மாலை வெந்நீரில் இழைத்து கொடுக்க சகவிதமான காய்ச்சலும் தீரும். துளசி பூங்கொத்து திப்பிலி வசம்பு சம அளவு சூரணம் எடுத்து 4 மடங்கு சர்க்கரை கலந்து 1 சிட்டிகை தேனில் குழைத்து சாப்பிட கக்குவான் இருமல் தீரும்.
நிலத்துளசி: சிறு குழந்தைகளுக்கு அதிகளவு தாய்ப்பால் குடிப்பதால் ஏற்படும் மாந்தம், மாந்தசுரம் போகும். துளசியிலை 20, தோலை நீக்கிய இஞ்சி 2 கிராம் எடுத்து சிதைத்து 200மிலி நீரில் போட்டு 100 மிலியாக காய்ச்சி நாள்தோறும் 3 வேளை ஒரு மொடக்கு வீதம் குடித்து வந்தால் பித்தம், சீதளம் முதலியவற்றால் ஏற்படும் காய்ச்சல் 3 நாட்களில் தீரும்.
அரைப்பிடி இலையை சிதைத்து அரைலிட்டர் நீரில் போட்டு 200மிலியாக காய்ச்சி வடிகட்டி 15 கிராம் கற்கண்டு 2 தேக்கரண்டி தேனும் கலந்து நாள்தோறும் 4 வேளை 1 மொடக்கு வீதம் குடிக்க மார்பு நோய், காசநோய், காய்ச்சல் நீங்கும்.
நாய்த்துளசி: குத்திருமல், கோழை, முக்குற்றம் என்னும் வாத, பித்த கப நோய்களை நீக்கும். இலைகளை பிட்டவியலாய் அவித்து பிழிந்த சாறு 5மிலி காலை, மாலை குடித்துவர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை அதிகரிக்கும்.
கல்துளசி: கட்டி, வண்டுகடி, காணாக்கடி, கோழையை தள்ளுகின்ற ஐயசுரத்தை போக்கும்.
முள்துளசி: எலி கடித்தால் ஏற்படும் நஞ்சு நீக்கும். வெட்டுகாயத்தால் ஏற்பட்ட புண்களை ஆற்றும்.
செந்துளசி: முக்குற்றத்தால் ஏற்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
கருந்துளசி: இருமல், இறைப்பு, நெஞ்சில் தங்கிய கோழை, வயிற்றுப்புழு, இருமலினால் ஏற்படும் கேவல், மார்ப்புசளி, முப்பிணி நீங்கும். துளிசிஇலைச்சாறு 1 மிலி தேன் 5 மிலி வெந்நீர் 5 மிலி கலந்து காலை மாலை 20 முதல் 30 நாட்கள் சாப்பிட இதய நோய் கட்டுக்குள் வரும்.துளசியிலை 1 பிடி மருதம் பட்டை 40 கிராம் எடுத்து சிதைத்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டர் சுண்டும்வரை கொதிக்கவைத்து அதில் 2 தேக்கரண்டி தேன் கலந்து 1 மொடுக்கு வீதம் ஒருநாளுக்கு 6 வேளையாக 20 நாள் குடித்துவர சீரற்ற இதய துடிப்பும், இதயத்தை பிடிப்பது போன்ற வலியும் குறையும். துளசியை இடித்து சூரணத்தை சலித்து மூக்கில் உறிஞ்சினால் வயிற்றில் உள்ள புழுக்கள் மலத்தில் விழுந்து விடும். துளசியை இடித்து பிழிந்த சாற்றுடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் பிறகு குளித்து வந்தால் பேன் பொடுகு தொல்லை நீங்கும்.
துளசி சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசிவர வலி குறையும். வெட்டுகாயங்களுக்கு துளசி சாற்றை பூசி வந்தால், விரைவில் குணமாகும். துளசி இலைகளை வீட்டில் கட்டி வைத்தால் கொசுக்கள் வராது. தமிழகத்தின் பல பகுதிகளில் இளம் வயது சிறுவர்கள், பெண்கள் என பலரும் துளசியின் தண்டுபகுதியை சிறு துண்டுகளாக வெட்டி கோர்த்து மாலையாக அணிந்து கொண்டிருப்பர். இந்த துளசி மாலையை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு அதை அணிந்தவர்களுக்கு பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.