'லிங்கா' படத்தில் 'காப்பி' அடிக்கப்பட்ட காட்சிகள்!

ஒரு படம் வெளிவருவதற்கு முன் அந்தப் படத்தின் கதை தன்னுடையது என ஒரு சிலர் பிரச்சனை எழுப்புவுதும், வழக்கு தொடுப்பதும் சமீப காலத்தில் அதிகமாகிவிட்டது. அப்படிப்பட்ட விவகாரங்களை சம்பந்தப்பட்ட படக் குழுவினர் படம் வெளிவருவதற்குள் சமாளிப்பது பெரிய விஷயம்.

படம் வெளியான பின் அவர்கள் வேறு சில விவகாரங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அது, காப்பி அடித்து எடுக்கப்படும் காட்சிகள். ஹாலிவுட் படங்களிலிருந்தோ, கொரியன், ஈரானிய படங்களில் இருந்தோ அப்படியே காட்சிகளை உருவி தங்களது படங்களில் பயன்படுத்திக் கொள்வது காலம் காலமாகவே நடந்து வருகிறது.

இதுவரை ரஜினி படங்களுக்கு அப்படி ஒரு பிரச்சனை எழுந்ததில்லை. தற்போது லிங்கா படத்திற்கு எழுந்துள்ளது. சமூக வலைத்தள பயன்பட்டாளர்கள் லிங்கா படத்தில் காப்பி அடிக்கப்பட்ட காட்சிகளை ஒரு சில நாட்களுக்குள்ளேயே கண்டுபிடித்து விட்டார்கள். 'லிங்கா' படத்தின் ஆரம்பத்தில் ஒரு நகைக் கண்காட்சியில் ரஜினிகாந்த் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நெக்லசை திருடச் செல்வார். அப்போது ஒரு குறுகிய அறைக்குள் ரஜினிகாந்தும், அனுஷ்காவும் சிக்கிக் கொள்வார்கள். அந்த அறையிலிருந்து கொண்டு, அறைக்கு வெளியே மாட்டி வைக்கப்பட்டுள்ள சாவியை ஒரு காந்தத்தின்(மேக்னட்) உதவியால் ரஜினி அவருடைய கைக்கு அந்த சாவியைக் கொண்டு வரும் காட்சி ஒரு ஹாலிவுட் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது.

1966ம் ஆண்டு வெளிவந்த 'ஹௌ டு ஸ்டீல் எ மில்லியன்' என்ற படத்தில் மேலே குறிப்பிட்டுள்ள காட்சி அப்படியே உள்ளது. இந்தப் படத்தை வில்லியம் வைலர் இயக்கியுள்ளார். 'லிங்கா'வில் ரஜினிகாந்த், அனுஷ்கா நடித்த காட்சியில் பீட்டர் ஓ டூலி, ஆட்ரி ஹெப்பம் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
அடுத்து 'லிங்கா' படத்தின் கிளைமாக்ஸ் பலூன் காட்சி. இந்த காட்சிக்காக அவர்கள் எந்த ஹாலிவுட் படங்களையும் பார்க்கவில்லை போலிருக்கிறது. தமிழ்ப் படத்திலிருந்தே காப்பி அடித்து விட்டார்கள். ஸ்ரீதர் இயக்கத்தில் 1969ம் ஆண்டு வெளிவந்த படம் 'சிவந்த மண்'. இந்தப் படத்தின் கிளைமாக்சில் நாயகி காஞ்சனாவை, பலூனில் வில்லன் எம்.என்.நம்பியார் அழைத்துச் செல்லும் போது, நாயகன் சிவாஜிகணேசன் பலூனுக்குள் ஏறி நாயகியைக் காப்பாற்றுவார். அந்தக் காட்சியை அப்படியே 'லிங்கா' கிளைமாக்சில் 'காப்பி' அடித்து பயன்படுத்தி விட்டார்கள்.

ஆக, 1960களில் வந்த இரண்டு பழைய திரைப்படங்களில் இருந்து 'லிங்கா' படத்தின் இரண்டு காட்சிகள் காப்பி அடிக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்திருக்கிறது.

ரஜினியின் 'பன்ச்' டயலாக்கில் சொல்வதென்றால், 'இது டிரைலர்தான் கண்ணா, மெயின் பிக்சர் இன்னும் இருக்கு'....