அமலா - நாகார்ஜுனா மகன் படம் ஆரம்பம்!

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக இன்றும் இளமையுடன் இருக்கும் நாகார்ஜுனா, 90களில் தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய அமலா ஆகியோரின் மகன் அகில் நடிகராக அறிமுகமாகும் தெலுங்குத் திரைப்படம் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. வி.வி. விநாயக் இயக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தெலுங்குத்  திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும் நடிகர் நிதினின் தந்தையான சுதாகர் ரெட்டி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

 முன்னணி வசனகர்த்தாவான கோனா வெங்கட் படத்திற்கு வசனம் எழுதுகிறார். தனது அறிமுகப் படம் குறித்து அகில் கூறியதாவது, “இனிமேலும் தாமதிக்காமல் எனது அறிமுகப்படத்தைப் பற்றிய அறிவிப்பை இப்போது வெளியிடுகிறேன். வி.வி.விநாயக்தான் படத்தின் இயக்குனர். தற்போதுதான் சம்பிராதயமான பூஜையை நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினருடன் முடித்தோம்.

இவ்வளவு நாள் தாமதத்திற்கு மன்னிக்கவும். என்னுடைய தயாரிப்பாளர்களான நிதின், சுதாகர் ரெட்டி ஆகியோருடன் இணைந்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார். அகில் குழந்தையாக இருந்த போது 'சுட்டிக் குழந்தை' என்ற தமிழில் பெயரிடப்பட்டு வெளிவந்த 'சிசிந்திரி' என்ற தெலுங்குப் படத்திலும் சில மாதங்களுக்கு முன் 'மனம்' என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தார். அகில் எப்போது நாயகனாக அறிமுகமாவார் என்பதை தெலுங்குத் திரையுலகமும், ரசிகர்களும் காத்திருந்தார்கள். அவர்களின் ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. விரைவில் படத்தின் தொடர்ச்சியான படப்பிடிப்பு நடைபெற உள்ளது.