சங்கராபரணம் பாடல்கள் சரியில்லை என்று சொல்லியிருந்தால் தற்கொலை செய்திருப்பேன் - எஸ்.பி.பி...!

1979ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான தெலுங்கு படம் சங்கராபரணம். தமிழ் நாட்டில் தெலுங்கிலேயே வெளிவந்து 100 நாட்கள் ஓடியது.
கே.வி.மகாதேவன் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் காலத்தை வென்று இப்போதும் நின்று கொண்டிருக்கிறது. இப்படத்தை கே.விஸ்வநாத் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். சோமயாஜூலு, மஞ்சுபார்கவி, ராஜலட்சுமி நடித்திருந்தனர்.

தற்போது இந்தப் படத்தை ஸ்ரீசபரிகிரி வாசன் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் பி.எஸ்.ஹரிகரன், டி.பி.செந்தாமரைக் கண்ணன் ஆகியோர் இணைந்து நவீன முறையில் டிஜிட்டல் மயமாக்கி, தமிழிலும் டப் செய்து வெளியிடுகின்றனர்.
வருகிற அக்டோபர் 2ம் தேதி இப்படம் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் நவீன முறையில் மாற்றப்பட்ட இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று(செப் 25ம் தேதி) நடந்தது. விழாவில் சங்கராபரணம் படத்தின் தயாரிப்பாளர் எடிடா நாகேஸ்வரராவ், இயக்குநர் கே.விஸ்வநாத், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்று இசை தட்டை வெளியிட்டனர்.

கடவுள் கொடுத்த வரம்

பின்னர் பேசிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், சங்கராபரணம் படத்தின் பாடல்கள் விஜயா கார்டனில் பதிவு செய்யப்பட்டது. இந்தப்பாடலை அப்போது பதிவு செய்தபோது எனக்கு வயது 33, இப்போது வயது 68. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு அதேபாடலை நான் இப்போது தமிழில் பாடியிருக்கிறேன். 68 வயதாகியும் எனது குரல் அப்படியே இருக்கிறது என்றால், இதை கடவுள் கொடுத்த வரமாக நினைக்கிறேன். சங்கராபரணம் படம் பற்றி நிறைய விஷயங்களை சொல்லலாம். உதாரணமாக... லதா மங்கேஷ்கர் இந்தப்படத்தை உடனே பார்க்க வேண்டும் என்று சொல்லி, நடிகர் சிவாஜிக்கு போன் செய்து சென்னைக்கு வந்து படம் பார்த்துவிட்டு மும்பை சென்றார்.

தற்கொலை செய்திருப்பேன்!

சங்கராபரணம் படத்தை இயக்கிய கே.விஸ்வநாத் எனது பெரியப்பா மகன் தான். இந்தப்படத்தை இயக்குவது தொடர்பாக எனது அப்பாவிடம் அவர் பேசியுள்ளார். அவர் தான் இதை உடனடியாக மணியிடம்(எஸ்.பி.பி) சொல்லி பாட வை என்றார். நான் சொன்னால் அவன் கேட்பானா என்று விஸ்வநாத் கேட்க, கேட்டவில்லை என்றால் மூஞ்சியில் குத்தி இந்தப்பாடலை பாட வை, சங்கராபரணம் பாடலை பாட அவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார். பிறகு விஸ்வநாத் என்னிடம் சொன்னபோது நான் சற்று தயங்கினேன். இருந்தாலும் கே.வி.மகாதேவனின் உதவியாளர் புகழேந்தியிடம் நிறைய பயிற்சி பெற்று இந்தப் படத்தின் பாடல்களை பாடினேன். பேப்பரில் இருக்கும் வரிகளை எண்ணி பாடாமல் ஆழ்மனதில் இருந்து பாடு என்று புகழேந்தி அறிவுறுத்தினார். அதன்படி படத்தின் பாடல்களை பாடினேன். யாராவது சங்கராபரணம் படத்தின் பாடல்கள் சரியில்லை என்று சொல்லியிருந்தால் தற்கொலை செய்திருப்பேன்.

சிறு தொண்டனாக பணியாற்றியுள்ளேன்

பாட்டு பாட நான் முறையாக பயிற்சி பெற்றது கிடையாது, கேட்ட ஞானத்தை வைத்து பாடுகிறேன். இந்தப்படம் ஆரம்பித்தது முதல் முடிந்தது வரை எல்லாமே கடவுளின் அனுக்கிரகம் தான். சங்கராபரணம் படம் வெளிவந்தபோது நான் முதலில் அந்தப்படத்தை பார்க்கவில்லை. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை பார்த்து தியேட்டரை விட்டு வெளியே வந்த ரசிகர்கள் பலர் கண்கலங்கியபடி சென்றதை நான் பார்த்துள்ளேன். படம் வெளியான 3 நாட்களுக்கு பிறகு தான் சங்கராபரணம் படத்தை எனது நண்பர்கள் உடன் சென்று பார்த்தேன். இந்தப்படம் பல தேசிய விருதுகளை வாங்கி இருக்கிறது. மூலஸ்தானமான இப்படத்தில் நான் ஒரு சிறுதொண்டனாக பணியாற்றி இருக்கிறேன்.

சங்கராபரணத்தில் நான்கு ஜாம்பவான்கள்

படத்தின் மொத்த ஸ்கிரிப்ட் என்று பார்த்தால் 25 பக்கம் கூட இருக்காது, அதே போல் ஹீரோயினுக்கான வசனம் 3 பக்கம் கூட இருக்காது. இந்தப்படத்தின் ஹீரோ சோமயாஜூலு ஆந்திராவில், ஒருமாவட்டத்தில் உதவி கலெக்டராக இருந்தவர். அவரை நான் தான் இந்தப்படத்தில் அறிமுகம் செய்தேன். இந்தப்படத்தில் நான்கு ஜாம்பவான்கள் உள்ளனர். ஒருவர் இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் விஸ்வநாத், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. இப்படத்தை பற்றி பேசினாலே பல நினைவுகள் வருகிறது. அப்போது இசை சம்பந்தப்பட்ட இரண்டு படங்கள் ரிலீஸானது ஒன்று சங்கராபரணம் மற்றொன்று பயணங்கள் முடிவதில்லை. இரண்டு படமே ஹிட்டாகின.

மரியாதை பெற்று தந்த படம்

சங்கராபரணம் படம் எனக்கு மரியாதையை பெற்ற தந்த படம். இந்தப்படம் ரிலீஸாவதற்கு முன்பு ஏய் பாலு என்று அழைத்தவர்கள், இப்படத்தின் ரிலீஸ்க்கு பிறகு வணக்கம் பாலு என்று அழைக்க தொடங்கினர். நான் எந்த நிழ்ச்சிக்கு, உள்நாட்டிலோ, வெளிநாடுகளுக்கு சென்றாலோ சங்கராபரணம் பாடலை பாடாமல் வருவது கிடையாது. வெட்டு குத்து, அருவா, இரத்த கலாச்சசாரம் இல்லாமல் ஒரு அமைதியான படம் இது, மனதுக்கு மிகுந்த அமைதியை தந்த படம் சங்கராபரணம்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப்படம் மீண்டும் மெருகூட்டப்பட்டு வெளியாக இருக்கிறது. தெலுங்கில் செய்ய முடியாத பல விஷயங்களை இப்போது தமிழில் செய்து உள்ளார். இந்தப்படம் பட்டிதொட்டியெல்லாம் சென்று வெற்றி பெற வேண்டும், அதற்கு ரசிகர்களாகிய உங்களது ஆதரவு வேண்டும், நிச்சயம் நீங்கள் தருவீர்கள் இந்தப்படத்தை வெற்றி பெற செய்வீர்கள் என்று நம்புகிறேன்.