மிளகின் இயற்கை வைத்தியம்.

மிளகு ஒரு கொடி இனத் தாவரம். இது படர கொழு, கொம்பு, மரம் தேவை. இதன் பழங்களை உலர வைத்து கருமிளகும், வெண்மிளகும் தயாரிக்கப்படுகின்றன. பழுக்காத காய்களை உலர வைத்து கருமிளகும், பழுத்த பழங்களை நனைய வைத்து, மேல் தோலை நீக்கி, வெண் மிளகும் எடுக்கப்படுகின்றன. சரித்திர வரலாற்றின் படி, உலக வர்த்தகத்தில் மிக முக்கியமான வாசனை திரவியம் மிளகு. வருடத்திற்கு 75,000 டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மிளகின் பயன்கள்

உள்ளுக்கு மருந்தாக – மிளகு காரமும், கைப்பும் நிறைந்திருப்பதால், உள்ளுக்கு சூடு தரும். பசியை தூண்டி ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். உமிழ்நீரை சுரக்க செய்வதால், உணவின் சுவை உணர்வுகளை அதிகப்படுத்தும். எனவே எல்லா வித ஜீரணக் கோளாறுகளுக்கும், வயிற்றில் ஏற்படும் தொற்றுகளுக்கும் நல்ல மருந்து.

மிளகை பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடிக்க வயிற்றுப் பொருமல், தொற்று, அஜீரணம் குறையும். கல்லீரல், குடல் இவை நன்றாக இயங்கும்.

ஜலதோஷம், இருமல், ஆஸ்த்மா போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு மிளகு கஷாயம் நல்லது.

மிளகை நெய்யில் பொரித்து சாப்பிட வறட்டு இருமல் நிற்கும். ஊசி முனையில் மிளகை குத்தி, நெருப்பில் காட்டி, அதன் புகையை மூக்கினுள் செலுத்தி, உறிஞ்சினால், மூக்கடைப்பு நீங்கும்.

மிளகுப் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் இருமல் குறையும். வெல்லத்தை நீரில் கொதிக்க வைத்து எடுத்து குளிர வைக்கவும். தேனையும், மிளகையும் சேர்த்து கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும். தொண்டை புண்ணுக்கு மிளகுத்தூள், மஞ்சள்தூள், தலா 1/2 தேக்கரண்டி எடுத்து ஒரு கப் பாலில் கலந்து குடிக்கலாம்.

முன் மண்டைத் தலைவலி, நீர்க்கோர்வை இவற்றுக்கு, மிளகு போட்டு காய்ச்சிய எண்ணெய்யை தேய்த்து, குளித்து, புளியில்லா பத்தியத்துடன் இருந்தால் நிவாரணம் கிட்டும்.

சர்மத்தில் ஏற்படும் எரிச்சலுக்கும், சீழ் வடிவதற்கும் மிளகுக் கஷாயம் நல்லது. தோலின் பல அலர்ஜி தடிப்புகளுக்கு மிளகை சாப்பிட்டு வரலாம்.
மிளகு விஷங்களை முறிக்கும்.

குளிருடன் கூடிய ஜுரத்திற்கு, மிளகு கஷாயம் குடித்தால் ஜுரம் தணியும்.
வெளி உபயோகத்திற்கு

சர்ம நோய்களுக்கு – மிளகை நீரில் அரைத்து அல்லது எண்ணெய்யுடன் சேர்த்து அரைத்து களிம்பாக்கி பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.

பல் வலி, பல் கூச்சம், ஈறுவலி இவற்றுக்கு மிளகுப் பொடி சிறந்தது. பல் சொத்தையில் மிளகுப் பொடி. மிளகு, வெங்காயம், உப்பு இவற்றை அரைத்து தலையில் புழுவெட்டுள்ள இடத்தில் பூசி வர, அங்கு முடி முளைக்கும்.