நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்ம ஆசாமி கொலை மிரட்டல்!

யுத்தம் செய், சென்னையில் ஒருநாள், சுட்டகதை, விடியும்முன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் லட்சுமிராமகிருஷ்ணன். அதோடு, ஆரோகணம் என்ற படத்தை அடுத்து இப்போது நெருங்கி வா முத்தமிடாதே என்றொரு படத்தை இயக்கி வருகிறார். அது மட்டுமின்றி, தொலைக்காட்சியிலும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இதில், பெரும்பாலும் கணவன்-மனைவிக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லி வருகிறார். அப்போது, யார் தவறானவர்களோ அவர்களிடம் கடுமையாகவும் நடந்து கொள்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இதன்காரணமாக அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் நிறையபேர் உருவாகிக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக யாரோ மர்ம ஆசாமி அவருக்கு போன் போட்டு கொலை மிரட்டல் விடுத்து வந்தாராம். இதனால் நேற்று சென்னையிலுள்ள கமிஷனர் அலுவலகத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் சார்பில் அவரது கணவர் புகார் அளித்துள்ளாராம். அதோடு, அந்த மர்ம நபர், தன்னிடம் போனில் எந்த மாதிரியான வார்த்தைகளை பிரயோகம் செய்து மிரட்டல் விடுத்தார் என்பதையும் தெளிவாக சுட்டிகாட்டியிருக்கிறாராம் லட்சுமிராமகிருஷ்ணன்.