'ஐ' - ராணா டகுபதி ஏன் வரவில்லை..?

'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள தெலுங்குத் திரையுலகிலிருந்து ராணா டகுபதி அழைக்கப்பட்டிருந்தாராம். ஆனால், நேற்றைய விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பின்னணிப் பாடகி சின்மயி, 'ஜிகர்தண்டா' பாபி சிம்ஹா, ராணா டகுபதி அரங்கினுள் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவரையும் வரவேற்றுப் பேசினார்.

அதன் பின் ஒரு பாடலுக்கு நடனமாடிய பின் பேசிய விக்ரமும் ராணா வந்ததற்கு நன்றி என்றும் பேசினார்.
ஆனால், ராணா நிகழ்ச்சிக்கு வரவே வராதது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர்களுக்கும், ஏன், படத்தின் நாயகனுக்கும் கூட யாருமே சொல்லவில்லை என்று தெரிகிறது. யார் இந்த இசை வெளியீட்டு விழாவை முன்னின்று நடத்தியவரோ அவர்தான் அதற்குப் பொறுப்பாளி. ஒருத்தருக்கொருத்தர் கோ-ஆர்டினேஷன் இல்லாமலேயே விழாவை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

அதன் பின் இசை வெளியீட்டு நிகழ்வு நடக்கும் போது சின்மயி உச்சக்கட்டமா, ராணா டகுபதி எங்கிருந்தாலும் வரவும், என்று அறிவித்தது அதைவிட பெரிய காமெடி. அப்போது கூடவா அவர் வராதது தெரியாமல் போனது. இவ்வளவு குளறுபடிகள் நடப்பதை யாருமே கண்டு கொள்ளாமல் இருந்தததுதான் ஆச்சரியமானது.
ஆனால், நேற்று மதியமே 'ஐ' விழாவில் தன்னால் கலந்து கொள்ள முடியாமல் போனது பற்றி ராணா டகுபதி அவருடைய டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது, “படப்பிடிப்பின் காரணமாக என்னால் 'ஐ' இசை விழாவில் கலந்து கொள்ள முடியாது, ஒரு மிகப் பெரிய விழாவை தவற விடுகிறேன். ஆர்னால்ட் மற்றும் ரஜினிகாந்துடன் மேடையில் அமரும் வாய்ப்பை மிஸ் செய்கிறேன். விக்ரம், இயக்குனர் ஷங்கர், ஆஸ்கர் பிலிம்ஸ் ஆகியோருக்கு வாழ்த்துகள்,” என்று தெரிவித்திருக்கிறார்.
மதியமே அவர் டுவிட்டர்ல போட்டதை யாருமேவா பார்க்கலை.... !!