இரவு லேட்டா சாப்பிட்டா ஞாபக சக்தி குறையும்.

இரவு வெகுநேரம் கழித்து சாப்பிடுவோருக்கு ஞாபக சக்தி குறைவதாக, கலிபோர்னியா பல்கலை பேராசிரியர் கிறிஸ்டோபர் கால்வெல் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.

இதற்காக, வழக்கமான நேரத்தில் சாப்பிட்டு, தூங்கும் சுண்டெலி ஒன்றின், உணவு நேரம் மாற்றப்பட்டது. அதன் பின்னரும், சுண்டெலியிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை.

அதன் தூக்கம், எடை உள்ளிட்டவை சீராக இருந்தன. ஆனால், அதற்கு ஏற்கனவே அறிமுகமான ஒரு பொருளை காண்பித்த போது, அதை உடனடியாக அடையாளம் காண முடியாமல், சுண்டெலி தயங்கி நின்றது.

அதே சமயம், வழக்கமான நேரத்தில் உண்டு, உறங்கிய மற்றொரு எலி, அந்த பொருளை உடனடியாக ஓடிச் சென்று தூக்கியது. மற்றொரு சோதனை யில், அச்சமூட்டும் ஒரு பொருளை கண்டு இரு எலிகளும் பயப்பட்டன.

அதன் பின், சில நாட்கள் கழித்து, நேரம் கழித்து உணவு உண்ட எலியிடம் மீண்டும் அந்த பொருள் காண்பிக்கப்பட்டது. அப்போது, அந்த எலி முன் போல் அச்சமடையவில்லை. ஞாபக மறதி காரணமாக, குறிப்பிட்ட பொருள் மீதான அச்சம் குறைந்திருந்தது.

அதே சமயம், நேரம் தவறாமல் உணவு உண்டு வந்த எலியிடம், அந்த பொருளை காட்டியதும், பீதியில் அலறி ஓடியது. இதில் இருந்து, ‘லேட்டா’ சாப்பிட்டா மூளையில் சேமிக்கப்பட்ட, ‘டேட்டா’ பாதிக்கும் என்பது நிரூபணமாகியுள்ளது.