பாரதிராஜா- யுவன்ஷங்கராஜா புதிய கூட்டணி!

தமிழ் திரையுலகில் இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி இருவருமே அவரவர் துறையில் உயர்ந்து வந்தனர். நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் இணைந்து பல வெற்றிப் படங்களையும் பாடல்களையும் கொடுத்திருக்கிறார்கள்.

இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதும், பின்னர் சேர்ந்து கொள்வதும் வழக்கமான ஒன்றுதான். இருந்தாலும் இருவரும் கடைசியாக இணைந்து கடைசியாகப் பணியாற்றிய படம் 1992ல் வெளிவந்த 'புது நெல்லு புது நாத்து'. சுமார் 22 வருடங்களாக அவர்கள் இணைந்து பணியாற்றவேயில்லை. அதன் பின் ஒரு சில திரைப்பட விழாக்களில் மட்டுமே இருவரும் கலந்து கொண்டார்கள்.
ஆனால், பாரதிராஜா இயக்கிய 'அன்னக்கொடி' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்குப் பின் இருவருக்குமிடையே மனஸ்தாபம் அதிகரித்து விட்டது. இதனிடையே பாரதிராஜா தற்போது நாயகனாக நடிக்கும் 'ஓம்' படத்திற்கு இளையராஜாவின் இளைய மகனான யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. “நீண்ட நாட்களாகவே யுவன் எப்ப அங்கிள் நாம இணைந்து படம் பண்றதுன்னு கேட்டுக்கிட்டிருந்தான், அதான் இப்ப 'ஓம்' படத்தில் இணைந்திருக்கிறோம்,” என பாரதிராஜா அவர்களது புதிய கூட்டணி பற்றித் தெரிவித்துள்ளார்.

'சலீம்' படத்தை இயக்கிய நிர்மல்குமார் இயக்கும் இந்தப் படத்தில் பாரதிராஜா நாயகனாக நடிக்கிறார்.  பாரதிராஜா இயக்கும் படத்திற்கு இசையமைக்காமல் அவர் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அவருடன் முதன் முறையாகச் சேர்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. ஏற்கெனவே இளையராஜாவிற்கு ஆகாத வைரமுத்துவுடன், 'இடம் பொருள் ஏவல்' படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இணைந்து பாடல்களை உருவாக்கியிருக்கிறார். இப்போது பாரதிராஜாவுடனும் இணைந்திருக்கிறார். இது திரையுலகத்தினரிடையே ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.