மீண்டும் தமிழுக்கு வருகிறார் சார்மி!

சிம்பு கதாநாயகனாக அறிமுகமான படம் - காதல் அழிவதில்லை. டி.ராஜேந்தர் இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. காதல் அழிவதில்லை படத்தைத் தொடர்ந்து ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு என சில படங்களில் நடித்தார்.

இப்படங்களுக்குப் பிறகு சார்மிக்கு தமிழில் தொடர்ந்து பட வாய்ப்பு வரவில்லை. எனவே வேறு வழி இல்லாமல் தெலுங்குப் பக்கம் போனார் சார்மி. அங்கே அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக பல படங்களிலும் நடித்து சில வருடங்களுக்கு முன்பு வரை நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக இருந்தார். பிறகு மார்க்கெட் இழந்த சார்மி, சின்ன பட்ஜெட் படங்களில் நடிப்பது, ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுவது, கன்னடப் படங்களில் நடிப்பது என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.


இந்நிலையில், கங்கணா ரணாவத் நடித்து ஹிந்தியில் சூப்பர் ஹிட் ஆன 'குயின்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் சார்மி. குயின் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீ-மேக் செய்யப்பட உள்ளது. நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் இப்படத்தின் ரீ-மேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார்.

'குயின்' படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடிக்க த்ரிஷா, நயன்தாரா உட்பட பல முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் தியாகராஜன். அவர்கள் கேட்ட சம்பளம் அதிகமாக இருந்ததாலும், அவர்களிடம் குறிப்பிட்ட நாட்கள் தொடர்ந்து டேட்ஸ் இல்லாததாலும் நடிகை சார்மியை அணுகி உள்ளனர். குயின் ரீமேக்கில் சார்மி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். சார்மி தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் பிரபலமான நடிகை என்பதால் மூன்று மொழிகளிலும் அவரையே நடிக்க வைக்க இருக்கிறார்களாம்.