பெற்றோர் பெயரைக் கெடுக்க மாட்டேன்…ஸ்ருதிஹாசன் நம்பிக்கை…!

பிரிந்து வாழும் நட்சத்திரத் தம்பதிகளான கமல்ஹாசன், சரிகாவின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் இந்தியத் திரையுலகில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருகிறார். இவரின் தங்கையான அக்ஷராவும் தற்போது ‘ஷமிதாப்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.

தனக்கு ஆரம்ப காலங்களில் நடிப்பதற்கு விருப்பமே இருந்ததில்லை என்கிறார் ஸ்ருதிஹாசன். அவர் ஒரு சிறந்த இசைக் கலைஞராக வரவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டாராம். திடீரென தான் நடிக்கும் முடிவை எடுத்தாகச் சொல்கிறார்.

“சின்ன வயசுல இருந்தே எனக்கு நடிக்கணும்கற ஆசையெல்லாம் இல்லை. இசை மேலதான் எனக்கு ஆர்வம் அதிகமா இருந்துச்சி. சின்ன வயசுல இருந்தே பாடிக்கிட்டேயிருப்பேன். இளையராஜா ஸார்கிட்ட பாடறதுக்கு வாய்ப்பு கிடைச்சி அவர் இசையில பாடினேன்.

ஒரு வீட்டுல அப்பா , அம்மா டாக்டரா இருந்தால் அவங்க குழந்தையும் கையில ஊசி எடுத்துக்கிட்டு தானும் டாக்டராகணும்னு சோதனை பண்ணிப் பார்க்கக் கூடாது. அதனாலதான், நானும் நடிகையாகணும்னு ஆசைப்படலை.இசைக் கலைஞராதான் வரணும்னு ஆசைப்பட்டுட்டு இருந்த சமயத்துல திடீர்னு நடிக்க வாய்ப்பு கிடைச்சது. எந்த சமயத்துலயும் அப்பா அம்மா பேரைக் கெடுக்கக் கூடாதுங்கற நம்பிக்கையிலதான் மேக்கப்பே போட ஆரம்பிச்சேன்,” என நடிகையான அனுபவத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.
தற்போது தமிழில் விஷால் ஜோடியாக ‘பூஜை’ படத்திலும், ஒரு சில இந்திப் படங்களிலும் ஸ்ருதிஹாசன் நடித்துக் கொண்டிருக்கிறார்.